மதுரையில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட திட்டம் @ மக்களவைத் தேர்தல் 2024

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மறைந்த தேமுமுக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மதுரையில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு தென் மாவட்டச் செயலாளர்கள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கி உள்ளனர். அதேநேரம் கட்சிக்கு புத்துயிர் ஊட்டவும் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனை மதுரையில் போட்டியிட வைக்கும் முடிவில் பிரேமலதா இருப்பதாக கூறப்படுகிறது. விஜயகாந்த் மறைவுக்கு பிறகு தேமுதிகவுக்கு மக்கள் மத்தியில் அனுதாபம் ஏற்பட்டுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் அதைத் தங்களுக்கு சாதகமாக்கும் எதிர்பார்ப்பில் அதிமுக, தேமுதிகவை தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்து வருகிறது.

ஆனால், தேமுதிக தற்போது வரை பிடிகொடுக்காமல் பாஜகவுடன் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், 2025-ம் ஆண்டு நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தல், அதற்கு அடுத்த ஆண்டு நடக்க உள்ள 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டுதான் கூட்டணி அமைக்க வேண்டும் என ஆலோசித்துள்ளனர்.

அந்த அடிப்படையில் பெரும்பான்மை மாவட்டச் செயலாளர்கள், பாஜகவுடன் கூட்டணி அமைப்பது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்றும், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் தென் மாவட்டச் செயலாளர்கள் ஒரே குரலில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனை மதுரையில் போட்டியிட வைக்க வேண்டும் எனவும், அதற்கு பிரேமலதாவும் பரிசீலனை செய்வதாகவும் உறுதியளித்ததால் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தென் மாவட்டச் செயலாளர்கள் சிலர் கூறியது: ''விஜயகாந்த் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தபோது அவரது தலைமையும், கட்சியையும் மக்கள் ஏற்றுக் கொண்டனர். அதனாலே மக்கள், அவரை தனித்துப் போட்டியிட்டபோது எம்எல்ஏ ஆக்கி மகிழ்ந்தனர். அதன் பிறகு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அடுத்த தலைவராக எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்தை விஜயகாந்திற்கு தங்கள் மனதில் இடம் கொடுத்தனர்.

ஆனால், அவரது துரதிஷ்டம் உடல் ஆரோக்கியம் இல்லாமல் போனதாலே விஜயகாந்த் அரசியல் முடிவுக்கு வந்தது. மற்றப்படி, தேமுதிக எம்எல்ஏ-க்கள், முக்கிய நிர்வாகிகள் அதிமுகவுக்கு சென்றதால்தான் எங்கள் கட்சி செல்வாக்கு சரிந்ததாக கூறுவது சரியில்லை.

96-ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியை இழந்ததும், அதிமுகவை விட்டு முக்கிய முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள் திமுகவுக்குச் சென்றனர். அதற்காக அதிமுக கரையவில்லை. அதுபோல், கருணாநிதியை விட்டு எம்ஜிஆர், வைகோ சென்றபோது கூட தற்போது திமுக பிரதான கட்சியாக செயல்படுகிறது. தலைவர்களை நம்பிதான் கட்சி இருக்கும். அதுபோலதான் விஜயகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால் இன்று அவர்தான் தமிழக முதல்வராக அமர்ந்திருப்பார். தற்போது விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, அவருக்கு இருந்த செல்வாக்கு அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தெரிந்துள்ளது.

இது கட்சிக்கு திடீரென்று ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சவும், கட்சியினரை உற்சாகப்படுத்தவும் அதற்கு விஜயகாந்த் உருவ ஒற்றுமையுடன் இருக்கும், அவரது சாயலில் வட்டாரமொழியில் அழகாக அரசியல் மேடைகளில் பேசும் அவரது மகன் விஜய பிரபாகரனை, விஜயகாந்த் சொந்த ஊரான மதுரை மக்களவைத் தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

அவர் போட்டியிட்டால் கண்டிப்பாக இந்த தலைமுறை வாக்காளர் கூட அவருக்கு வாக்களிப்பார்கள். மேலும், அடுத்த சட்டசபைத் தேர்தலில் விஜய், உதயநிதி போன்ற அடுத்த தலைமுறை தலைவர்கள் வர உள்ளதால் விஜய பிரபாகரனை அதற்கு தேமுதிக தயார்ப்படுத்த வேண்டும். அதற்கு பிரேமலதாவும், அதிமுக, பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றனர்.

ஆனால், தேமுதிக கேட்கும் 14 தொகுதிகளை அதிமுக கொடுக்குமா என்பது தெரியவில்லை. ஒற்றை இலக்கத்தில் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொண்டு அதிமுக பக்கம் செல்வதையே கட்சியினர் விரும்புகிறார்கள்'' என்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய பேசிய பிரேமலதாவும், ''எல்லா சித்தாந்தமும், சமூக நீதியும் உள்ள கட்சிதான் தேமுதிக'' என்று கூறியுள்ள நிலையில், இதே சித்தாந்தத்துடன் செயல்படும் அதிமுகடன் கூட்டணி அமைப்பதையே மறைமுக தெரிவித்ததாக அக்கட்சியினர் குறிப்பிடுகின்றனர். | வாசிக்க > “தேமுதிக தனித்துப் போட்டி (அ) 14 சீட், 1 மாநிலங்களவை இடம் தருவோர் உடன் கூட்டணி” - பிரேமலதா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE