“சாதனைப் பயணம்; ரூ.3440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து” - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: “ஸ்பெயின் நாட்டுக்கு தான் மேற்கொண்ட அரசுமுறைப் பயணம் ஒரு சாதனைப் பயணமாக அமைந்தது. ரூ.3440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஸ்பெயினில் இருந்து இன்று (பிப்.7) காலை தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தனது பயணத்தைப் பற்றி விவரித்தார்.

இது தொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், “

உங்கள் வாழ்த்துகளை எல்லாம் பெற்று ஸ்பெயின் நாட்டுக்குச் சென்ற நான் தமிழ்நாட்டுக்குப் பல்வேறு முதலீடுகளை ஈர்த்துவிட்டுத் திரும்பி இருக்கிறேன். அந்த வகையில் இது மிகப்பெரிய சாதனைப் பயணமாக அமைந்திருக்கிறது.

தமிழ்நாட்டில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு கடந்த ஜனவரி 29-ஆம் தேதி சென்றேன். முதல் நிகழ்வாக, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் பங்கேற்கும் முதலீட்டாளர் மாநாடு நடந்தது. அதற்கு ஸ்பெயின் நாட்டில் இருக்கின்ற பல்வேறு தொழில்துறை குழும நிர்வாகிகள் எல்லாம் வந்திருந்தார்கள்.

· ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகள்

· ஸ்பெயின் தொழில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள்

· இன்வெஸ்ட் ஸ்பெயின் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களை சந்தித்தேன்.

தமிழ்நாட்டில், தொழில் தொடங்குவதற்கு இருக்கக் கூடிய உகந்த சூழல் பற்றி அங்கே எடுத்துச் சொல்லி, நம்முடைய மாநிலத்தில் முதலீடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அதன் தொடர்ச்சியாக, அடுத்தடுத்த நாட்களில் ஸ்பெயின் நாட்டில் செயல்படுகின்ற முன்னணி நிறுவனங்களுடைய நிர்வாகிகளை தனித்தனியாக நேரில் சந்தித்து கலந்துரையாடினேன்.

தமிழ்நாட்டில் முதலீடு செய்யவேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். சில முக்கிய நிறுவனங்களின் பெயர்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

1. காற்றாலை மின் உற்பத்தியிலும், நீர் மறுசுழற்சியிலும் முன்னணி நிறுவனமான ஆக்சியானா நிறுவனம்

2. உயர்தர வீட்டுக் கட்டுமான பொருட்களின் உற்பத்தியிலும், பீங்கான் பொருட்கள் உற்பத்தியிலும் உலகின் முன்னணி நிறுவனமான ரோக்கா நிறுவனம்

3. கண்டெய்னர் முனையங்கள் மற்றும் சரக்கு பூங்காக்களை அமைப்பதில் சிறந்த நிறுவனமான ஹபக்-லாய்டு நிறுவனம்

4. சர்வதேசத் தரத்தில் சாலைக் கட்டமைப்பு வசதிகளை அமைக்கக்கூடிய அபர்ட்டிஸ் நிறுவனம்

5. மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கின்ற கெஸ்டாம்ப் நிறுவனம்

6. இரயில்வே சார்ந்த உற்பத்தி தொழிலில் உயர் தொழில்நுட்பத்துடன் செயல்படக்கூடிய டால்கோ நிறுவனம்

7. பொறியியல் வடிவமைப்பு மற்றும் பொறியியல் கல்வித் திறன் பயிற்சிக்கான நவீன கருவிகளை உற்பத்தி செய்கின்ற எடிபான் நிறுவனம்

8. உயிரியல் ஆராய்ச்சி மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான மேப்ட்ரீ நிறுவனம்

- ஆகிய நிறுவனங்களின் நிர்வாகிகளை எல்லாம் நான் சந்தித்தேன். இந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் எல்லோரும் தங்களுடைய தொழில் திட்டங்களையும் விளக்கியும், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தங்களுடைய ஆர்வத்தையும் தெரிவித்தார்கள்.

இந்த முயற்சிகளின் பயனாக, 3,440 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

1. ஹபக் லாய்டு நிறுவனம் – 2500 கோடி ரூபாய் முதலீடு.

2. எடிபான் நிறுவனம் – 540 கோடி ரூபாய் முதலீடு.

3. ரோக்கா நிறுவனமும் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக உறுதியளித்திருக்கிறது.

இந்த நிறுவனங்கள் மட்டுமில்லாமல், மற்ற நிறுவனங்களும் அடுத்தடுத்து எதிர்காலத்தில் தங்களுடைய முதலீடுகளை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தமிழ்நாடு குறித்தும், கழக அரசு குறித்தும் உலகளாவிய தொழில் நிறுவனங்களுக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையும், தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டையும் புகழ்ந்து உலக அளவில் முக்கியப் பத்திரிகையான 'நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்டுள்ள செய்தியை நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள்.

உற்பத்தித் துறையில் சீனாவுக்கு மாற்றாக, இந்தியா கருதப்பட்டு வரும் இந்த வேளையில், அந்த உற்பத்தித் துறையில் முந்திச் செயல்படுகின்ற மாநிலமாக தமிழ்நாடு முன்னேறி வருவதையும், பெரும் அளவிலான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய முதலீடுகள் பல தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் அந்தச் செய்தி சுட்டிக்காட்டி இருக்கிறது.

இந்தியா பயணிக்கக் கூடிய பாதையில், முந்தி பயணிப்பது மட்டுமல்ல, தமிழ்நாடு தனக்கென்று தனிப்பாதை ஒன்றை வகுத்துச் செயல்பட்டு வருவதாகவும், முதல் பக்கத்தில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறது, அதை பாராட்டியும் இருக்கிறது. இது போன்ற பாராட்டுகள்தான் எங்களை மேலும் உற்சாகப்படுத்தி செயல்பட வைக்கிறது.

தமிழ்நாட்டை தொழில்துறையில் தலைசிறந்த மாநிலமாக உயர்த்தும் எங்கள் பயணத்துக்கு ஸ்பெயின் பயணம் மிகமிக பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. இது போன்ற அடுத்தடுத்த பயணங்கள் திட்டமிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று முதல்வர் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல்வர் பதிலளித்தார். அப்போது நடிகர் விஜய் கட்சி தொடங்கியது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் மகிழ்ச்சி. நன்றி. வணக்கம்.” எனக் கூறிச் சென்றார். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை தொடர்பான கேள்விக்கு, “ஆம். அந்த உரையை நான் பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன். காங்கிரஸ் தான் ஆளுங்கட்சி போலவும், பாஜக எதிர்க்கட்சி போலவும் அவர் பேசியிருக்கிறார்” எனக் கூறினார்.

முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்துக்கான முதலீடுகளை ஈர்ப்பதற்காக, கடந்த ஜன.27-ம் தேதி ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றார். அவருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதல்வரின் செயலர் உமாநாத், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் வே.விஷ்ணு உள்ளிட்டோர் சென்றனர். ஸ்பெயினில் கடந்த ஜன.28-ம் தேதி முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதலீடு செய்ய தமிழகம் வரும்படி முதல்வர் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, பல்வேறு பிரபல நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து முதலீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதுகுறித்து, முதல்வர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், “ஸ்பெயினின் தொழில்துறை ஜாம்பவான்களான கெஸ்டாம்ப், டால்கோ மற்றும் எடிபன் ஆகிய நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மேற்கொண்டேன். எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் மேற்கொண்டது மகிழ்ச்சிக்குரியது. மேப்ட்ரீ நிறுவனத்துடன் பயனுள்ள பேச்சுவார்த்தை மேற்கொண்டேன்.

இதுபோன்ற பலனளிக்கும் முடிவுகளுடன், நான் ஸ்பெயினிலிருந்து புறப்படுகிறேன். சில நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். இது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோன்று, ஸ்பெயினில் உள்ள தமிழ் சமூகம் எனக்குக் காட்டிய அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் நன்றியுள்ளவனாவேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை ஸ்பெயினில் இருந்து சென்னை திரும்பிய முதல்வருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு நல்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்