ஸ்பெயினில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை: பலனளிக்கும் முடிவுகளுடன் சென்னை புறப்பட்ட முதல்வர் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: ஸ்பெயினில் எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், பலனளிக்கும் முடிவுகளுடன் அங்கிருந்து புறப்படுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்துக்கான முதலீடுகளை ஈர்ப்பதற்காக, கடந்த ஜன.27-ம் தேதி ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றார். அவருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதல்வரின் செயலர் உமாநாத், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் வே.விஷ்ணு உள்ளிட்டோர் சென்றனர். ஸ்பெயினில் கடந்த ஜன.28-ம் தேதி முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதலீடு செய்ய தமிழகம் வரும்படி முதல்வர் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, பல்வேறு பிரபல நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து முதலீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

அதில், ஹபக் லாய்டு நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான அபர்ட்டிஸின் சர்வதேச மற்றும் நிறுவன தொடர்பு தலைமை அதிகாரி லாரா பெர்ஜானோ முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

ரோக்கா நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளது. ஆக்சியானா என்ற நிறுவனமும் முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் (பிப்.5-ம்) தேதி ஸ்பெயின் மேட்ரிட் நகரில் உள்ள கெஸ்டாம்ப், எடிபன் நிறுவனம், டால்கோ நிறுவனம், மேப்ட்ரீ நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து, தமிழகத்தின் முதலீட்டு சூழல்களை எடுத்து கூறி, முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:

ஸ்பெயினின் தொழில்துறை ஜாம்பவான்களான கெஸ்டாம்ப், டால்கோ மற்றும் எடிபன் ஆகிய நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மேற்கொண்டேன். எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் மேற்கொண்டது மகிழ்ச்சிக்குரியது. மேப்ட்ரீ நிறுவனத்துடன் பயனுள்ள பேச்சுவார்த்தை மேற்கொண்டேன்.

இதுபோன்ற பலனளிக்கும் முடிவுகளுடன், நான் ஸ்பெயினிலிருந்து புறப்படுகிறேன். சில நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். இது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோன்று, ஸ்பெயினில் உள்ள தமிழ் சமூகம் எனக்குக் காட்டிய அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் நன்றியுள்ளவனாவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 7.30 மணிக்கு சென்னை வந்து சேர்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE