‘மறுசீரமைப்பு’ போர்வையில் மின்வாரியத்தை தனியாருக்குத் தாரை வார்க்கிறது திமுக அரசு: இபிஎஸ் சாடல்

By செய்திப்பிரிவு

சென்னை: "மறுசீரமைப்பு, செலவுகளை சிக்கனப்படுத்துதல் மற்றும் மனித சக்தியை ஒழுங்குபடுத்துதல் என்கிற போர்வையில், மின் வாரியத்தை பல கூறுகளாகத் துண்டாடி, படிப்படியாக மின்சார வாரியத்தை தனியாருக்குத் தாரை வார்க்கும் எண்ணத்தை திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று எச்சரிக்கிறேன். மேலும், மின்சார வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்தியில் பாஜக - திமுக கூட்டணி 2003-ம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோதுதான் மின்சாரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து, 2006-11ல் அப்போதைய மைனாரிட்டி திமுக அரசு, தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனமாக இருந்த, தமிழ்நாடு மின்சார வாரியத்தை 19.10.2010-ம் நாளிட்ட அரசாணை எண். 100-ன் வாயிலாக (1) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) (2) தமிழ் நாடு மின் தொடரமைப்புக் கழகம் (TANTRANSCO), (3) தமிழ் நாடு மின்சார வாரிய நிறுவனம் (TNEB Limited) என மூன்று நிறுவனங்களாக கம்பெனி சட்டத்தின்படி பிரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மீண்டும் திமுக அரசு, அரசாணை எண் 6 மற்றும் 7, நாள் 24.01.2024-ன்படி TANGEDCO-வை (1) தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் லிமிடெட் (TamilNadu Power Generation Corporation Ltd. (TNPGCL)), (2) தமிழ் நாடு மின் பகிர்மானக் கழகம் லிமிடெட் ( TamilNadu Power Distribution Corporation Limited (TNPDCL), (3) தமிழ் நாடு பசுமை எரிசக்திக் கழகம் லிமிடெட் (TamilNadu Green Energy Corporation Ltd. (TNGECL) என மூன்று நிறுவனங்களாகப் பிரித்ததோடு மட்மில்லாமல், இந்த மூன்று நிறுவனங்களும் ஏப்ரல் 1-ஆம் தேதி, வரும் நிதியாண்டு முதல் புதிய கணக்கை தனித் தனியே துவக்கிட அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பது, காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது போன்றவற்றை மின்சார வாரியத்தின் மூலமாகவோ அல்லது தமிழக அரசு மூலமாகவோ செயல்படுத்தாமல், தனியார் வசம் ஒப்படைக்கப்படும் வகையில் தனியார் முதலாளிகளுக்கு சாதகமாக பசுமை எரிசக்திக் கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த மாநில மின்சாரத் துறையானது, 1957-ம் ஆண்டு முதல் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவன அந்தஸ்துடன் தமிழ்நாடு மின்சார வாரியமாக அறிவிக்கப்பட்டது. அவ்வாறு அறிவிக்கும்போது, “மின் துறையானது தமிழ்நாடு அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த நேரத்தில் அதன் பணியாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த சலுகைகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படாது” என அன்றைய முதல்வர் காமராஜரால் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து எனது தலைமையிலான ஆட்சியிலும், மேற்கண்ட வாக்குறுதிப்படி தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களுக்கு ஏற்கெனவே நடைமுறையில் இருந்த சலுகைகள் யாவும் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தன. மின்வாரிய பணியாளர்களுக்கு அனைத்து சலுகைகளும் முழுவாரியக் கூட்ட முடிவுகளின்படியே தாமதமின்றி உடனுக்குடன் வழங்கப்பட்டன.ஆனால், மைனாரிட்டி திமுக அரசு ஆட்சியில் 2010-லும், திமுக ஆட்சியில் 2024-லும் மின்சார வாரியம் பிரிக்கப்பட்டு, தற்போது தனியாருக்கு தாரை வார்க்க திமுக அரசு வழிவகுத்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது.

மின் வாரியம் தனியார்மயமாக்கப்பட்டால் விவசாயிகளுக்கு விலையில்லா மின்சாரம், வீடுகள் மற்றும் நெசவாளர்களுக்கு சலுகைக் கட்டணத்தில் மின்சாரத் திட்டங்கள் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. இயற்கைச் சீற்றங்களின்போது ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமின்றி பாதிப்படைந்த மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டு மின்சாரம் வழங்கிய நிலை மாறி, அதிக மின்சாரத்தை உபயோகிப்பவர்களுக்கு முதலில் மின்பாதை சீரமைக்கும் வியாபார நோக்கம் தழைத்தோங்கும்.

மலைப் பிரதேசங்களில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு மின் இணைப்பு என்பது கனவில்தான் கிடைக்கும் என்ற நிலை உருவாகும். குறிப்பாக, இந்த திமுக அரசு பதவியேற்ற 32 மாத காலத்தில், ஏற்கெனவே இரண்டு முறை மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுவிட்டது. இப்போது மின்சாரத் துறையை தனியார்மயமாக்கும் முயற்சியால் மீண்டும் மின் கட்டண உயர்வு தமிழக மக்களின் தலையில்தான் விடியும்.

பல ஆண்டுகளாக, லட்சக்கணக்கான மின் ஊழியர்களின் உழைப்பால் உருவான தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உட்கட்டமைப்பு மற்றும் அதன் சொத்துக்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் நிலை உருவாகும். ஏற்கெனவே, திமுக அரசில் மின்சார வாரிய பணியாளர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய சலுகைகள், பதவி உயர்வு, பஞ்சப்படி, ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு, புதிய பணி நியமனங்கள் மற்றும் பதவி அனுமதிகள் யாவும் அரசின் ஒப்புதலுக்குப் பிறகே பரிசீலிக்கப்படும் என்று திமுக அரசு அறிவித்துள்ளதாகவும், துணை மின் நிலையங்களை Outsourcing என்கிற பெயரில் தனியாருக்கு திமுக அரசு தாரை வார்த்துள்ளதாக தொழிற்சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளன.

அதுபோலவே, திமுக அரசு ஆட்சிக்கு வந்து 32 மாதங்கள் முடிவடைய உள்ள நிலையில், மின்சார வாரியத்தில் இதுவரை கருணை அடிப்படை நியமனங்களைத் தவிர ஒரு பணி நியமனமும் செய்யப்படவில்லை. ஆனால், அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2021 வரை காலிப் பணியிடங்கள், போட்டித் தேர்வுகள் மூலமும், கருணை அடிப்படையிலுமாக சுமார் 22,000-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், கேங்க்மேன்கள் நியமிக்கப்பட்டனர்.

இன்றைய தேதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 58,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன என்றும், குறைந்த அளவுள்ள தொழிலாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் அதீத பணிச் சுமைகளைச் சுமக்க வேண்டி உள்ளதால், உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.அதிக வேலைப் பளு காரணமாக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்ட பணியாளர்களில் சிலர், தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்ந்துள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. “தன்னாட்சி அதிகாரம் கொண்ட தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனம்” என்கிற மின்வாரியத்தின் அந்தஸ்தை திமுக அரசு சிறுகச் சிறுக பறித்து, படிப்படியாக தனியார் வசம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளது என்று தொழிற்சங்கத்தினர் குற்றம் சுமத்துகின்றனர்.

மைனாரிட்டி திமுக ஆட்சி 2006-2011ல் பல மின் உற்பத்தி நிலையங்களை பழமையானவை எனக் காரணம் காட்டி மூடியதாகவும், புதிய மின் உற்பத்தித் திட்டங்களையும் அப்போதைய திமுக அரசு நடைமுறைப்படுத்தத் தவறியதால், கடந்த 2009-க்குப் பிறகு ஒருநாளைக்கு 15 மணி நேரம் கடுமையான மின்வெட்டை தமிழகம் சந்தித்தது. 2011-ல் மறைந்த முதல்வர் ஜெயலலாதா ஆட்சியில் மின்வாரியத்தின் உற்பத்தித் திறன் பெருக்கப்பட்டு, மின்வெட்டு முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டு, தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக விளங்கியது. இந்நிலை 2021 ஏப்ரல் மாதம் வரை தொடர்ந்தது.

திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன், 2021 மே மாதம் மீண்டும் மின்வெட்டை தமிழக மக்கள் சந்தித்தனர். இந்நிலையில், மீண்டும் திமுக அரசு மறுசீரமைப்பு என்கிற போர்வையில் மின்வாரியத்தை பல கூறுகளாகத் துண்டாடி கொஞ்சம் கொஞ்சமாக மின் உற்பத்தி, விநியோகம் உள்ளிட்ட அனைத்தையும் தனியார் வசம் ஒப்படைக்கும் நோக்கத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாருக்குத் தாரை வார்க்க எத்தனித்துள்ளது என்று தொழிற்சங்கங்கள் புகார் கூறுகின்றன.

ஆகவே, மறுசீரமைப்பு, செலவுகளை சிக்கனப்படுத்துதல் மற்றும் மனித சக்தியை ஒழுங்குபடுத்துதல் என்கிற போர்வையில், மின் வாரியத்தை பல கூறுகளாகத் துண்டாடி, படிப்படியாக மின்சார வாரியத்தை தனியாருக்குத் தாரை வார்க்கும் எண்ணத்தை திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று எச்சரிக்கிறேன். மேலும், மின்சார வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன், என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்