தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து 2 நாள் ஆலோசனை: ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகை

By செய்திப்பிரிவு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இன்று சென்னை வரும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள், தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருடன் 2 நாட்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் மாநிலம்தோறும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முன்னெற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னையில் ஆலோசனை நடத்துகின்றனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையில், தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மல்லே மாலிக் ஆகியோர் இன்று காலை 7.45 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வருகின்றனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பகல் 12 மணிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு மற்றும் தேர்தல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு தலைமை செயலகத்தில் வருமானவரித் துறை, காவல்துறை, வருவாய் புலனாய்வுத் துறை உள்ளிட்ட சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் மாலை 5.30 மணிவரை ஆலோசனை நடத்துகின்றனர்.

அதன்பின், நாளை காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலிவாயிலாக தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்கின்றனர். அதன்பின் இரவு 9 மணிக்கு மீண்டும் டெல்லி புறப்பட்டுச் செல்கின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தயாராக இருக்கும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE