சென்னையில் இருந்து நெல்லை வந்த வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசியதில் 9 இடங்களில் கண்ணாடிகள் சேதமடைந்தன. திருநெல்வேலி - சென்னை இடையே வந்தே பாரத் ரயில்இயக்கப்படுகிறது. திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்தரயில் பிற்பகல் 1.50 மணிக்குசென்னை சென்றடையும். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலிக்கு வந்து சேரும்.

கண்ணாடிகள் உடைப்பு: இந்நிலையில், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு நேற்று முன்தினம் பிற்பகலில்புறப்பட்ட ரயில் இரவில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த மணியாச்சி ரயில் நிலையத்தை கடந்துவந்து கொண்டிருந்தது. அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென ரயில் மீது கல்வீசி தாக்கினர்.

ரயில்வே போலீஸார் விசாரணை: இதில் ரயிலில் 9 இடங்களில் கண்ணாடிகளில் உடைப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி சந்திப்புக்கு ரயில் வந்தபின் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலுள்ள பிட்லைனுக்கு ரயில் கொண்டு செல்லப்பட்டு,சேதமடைந்த கண்ணாடிகளை மாற்றும் பணி இரவோடு இரவாக மேற்கொள்ளப்பட்டது. பின்னர் நேற்று காலை வழக்கம்போல் ரயில் புறப்பட்டுச் சென்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE