பட்டா நிலத்தில் சிலை நிறுவ அரசு அனுமதி தேவையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

மதுரை: தனியார் பட்டா நிலத்தில் சிலை நிறுவ அரசிடம் அனுமதி பெற தேவையில்லை, என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் முஷ்டக்குறிச் சியைச் சேர்ந்த வேல் என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: முஷ்டக்குறிச்சியில் எனக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது. அதில் முத்துராமலிங்கத் தேவரின் வெண்கலச் சிலையை நிறுவ அனுமதி கோரி, ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு அளித்தேன். ஆட்சியர் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதனால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் என் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிடப்பட்டது. இருப்பினும், என் கோரிக்கை இன்னும் பரிசீலிக்கப்படவில்லை. எனவே, என் பட்டா நிலத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை நிறுவ அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் பிறப்பித்த உத்தரவு: பட்டா நிலத்தில் விடுதலைப் போராட்ட வீரரின் சிலையை நிறுவ அரசிடமோ, உள்ளாட்சி அமைப்புகளிடமோ அனுமதி பெற தேவையில்லை. பட்டா வைத்திருப்பவருக்கு அந்த நிலத்தின் மீது உரிமை உள்ளது. சட்டப்படியான அல்லது பொது சட்டப் படியான உரிமையை நிர்வாக அறிவுறுத்தல் அல்லது அரசு உத்தரவுகள் மூலம் கட்டுப் படுத்தவோ, பறிக்கவோ முடியாது.

பொது வழிபாட்டுக்கான மத கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றால், அதற்கு ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். சிலைகள் அமைப்பதற்கு சட்டப்படியான விதிகள் எதுவும் இல்லை. தனி நபர் நினைவாக ஒரு சிலையை அமைப்பதை தடுக்கவோ, தலையிடவோ முடியாது. இதற்கு அதிகாரிகளின் அனுமதி தேவையில்லை. எனவே, மனுதாரருக்கு அவரது பட்டா நிலத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலையை திறக்க சுதந்திரம் உள்ளது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE