“நீட் தேர்வு... 2 ஆண்டு 8 மாதம் நிறைவாகியும் விடிவு பிறக்கவில்லை” - இபிஎஸ் @ அரூர்

By எஸ்.செந்தில்

அரூர்: தருமபுரி மாவட்டம் அரூர் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கொங்கு பல்நோக்குப் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா இன்று நடந்தது. முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இந்தப் பயிற்சி மையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், "நான் முதல்வராக பொறுப்பேற்ற போது, பலரும் ஏளனமாகவும், கீழ்த்தரமாகவும் விமர்சனம் செய்தார்கள். ஆனால் மக்கள், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவோடு 4 வருடம் சிறப்பான பொற்கால ஆட்சியை கொடுத்தோம். பல்வேறு திட்டங்களை அளித்தோம். மருத்துவத் துறையில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லுாரிகள் அமைத்து கொடுத்தோம். 7.5 உள் உதுக்கீடு கொண்டு வந்தோம்.அன்றைய எதிர்கட்சியாக இருந்த திமுக தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் ரத்து என்றார்கள்.

தற்போது 2 ஆண்டு 8 மாதம் நிறைவாகியும் விடிவு பிறக்கவில்லை.ரத்து செய்ய ரகசியம் இருக்கு என உதயநிதி கூறினார். அந்த ரகசியத்தை இதுவரை தெரிவிக்கவில்லை, ஆட்சிக்கு வந்ததும் ஒரு கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்து பல லட்சம் கையெழுத்து மக்களிடம் பெற்றனர். அதையும் உருப்படியாக செய்யவில்லை. அண்மையில் சேலம் இளைஞரணி மாநாட்டு அரங்கில் நீட் ரத்துக்காக பெறப்பட்ட கையெழுத்தெல்லாம் சிதறி கிடந்து குப்பைத் தொட்டிக்கு போனதை காண முடிந்தது. கடந்த காலத்தில் அதிமுக ஆட்சியை விமர்சித்தவர்கள் வியக்கும் வகையில் ஆட்சிக் கொடுத்ததற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன.

உள்ளாட்சித் துறையில் தேசிய அளவில் 140 விருதுகள் பெறப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு முன் நிலவி வந்த கடுமையான மின்வெட்டு அதனை நிர்வாகத் திறமையின் மூலம் படிப்படியாக குறைக்கப் பட்டது. விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்பட்டது. பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறைகளின் வசம் உள்ள 40 ஆயிரம் ஏரிகள், குளம் குட்டைகள் தூர் வார குடிமராமத்து திட்டங்கள் அறிவிக்கப் பட்டது. தூர்வாரிய அந்த வண்டல் மண்ணையும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள செய்தது அதிமுக அரசு . விவசாயிகளுக்காக அதிமுக அரசுக் கொண்டு வந்த பல்வேறுத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன" என்றார்.

இவ்விழாவில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், பி.தங்கமணி, வேலுமணி, கே.சி.கருப்பண்ணன், தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் யசோதா மதிவாணன், தருமபுரி மாவட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கத் தலைவர் வே.சந்திரசேகரன், செயலாளர் சேகர்,பொருளாளர் தங்கராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE