தூத்துக்குடியில் முதலாவது சுற்றுப் பயணம்: திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினரிடம் ஆர்வமுடன் மனு அளிப்பு

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: திமுக தேர்தல் அறி்க்கை தயாரிப்புக் குழுவினர் பொதுமக்கள் கருத்துகளைக் கேட்கும் பணியை தொடங்கியுள்ளனர். முதலாவதாக இன்று தூத்துக்குடியில் வைத்து தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை குழுவினர் கேட்டறிந்தனர். தொழில் துறையினர், விவசாயிகள், மீனவர்கள் என பல்வேறு தரப்பினர் ஆர்வமுடன் பங்கேற்று திமுக குழுவினரிடம் மனு அளித்தனர்.

தேர்தல் அறிக்கை குழு: மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் - நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாடு கருத்துக்கள்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பு மக்களின் கருத்துகள், கோரிக்கைகளை கேட்டறிகின்றனர்.

அதன்படி இக்குழுவினர் முதல் சுற்றுப்பயணத்தை தூத்துக்குடியில் இன்று தொடங்கினர். கனிமொழி எம்பி தலைமையில் குழு உறுப்பினர்களான தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், முன்னாள் எம்.பி, டி.கே.எஸ்.இளங்கோவன் , தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தமிழக அரசு தலைமைக் கொறடா கோ.வி.செழியன் எம்எல்ஏ, எழிலரசன் எம்எல்ஏ, ராஜேஸ்குமார் எம்பி, டாக்டர் எழிலன் நாகநாதன் எம்எல்ஏ ஆகியோர் தூத்துக்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

முக்கிய கோரிக்கைகள்: இதில் தொழில் வர்த்தக சங்கங்களை சேர்ந்தவர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், தொழில் முனைவோர், வியாபாரிகள், பெண்கள், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு, குறு தொழில் முனைவோர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களையும் அளித்தனர்.

தூத்துக்குடி துறைமுகம், விமான நிலையத்தை மேம்படுத்த வேண்டும். தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கிழக்கு கடற்கரை சாலையை நான்குவழிச் சாலையாக மாற்ற வேண்டும்.அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும். தூத்துக்குடி ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும். தூத்துக்குடிக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும். தூத்துக்குடி விவிடி சந்திப்பு பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும். உப்பு, தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆகிய தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன இதில் முக்கியமான கோரிக்கைகளாகும்.

நிகழ்ச்சியில் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா (ஓட்டப்பிடாரம்), ஜி.வி.மார்க்கண்டேயன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 2 அமைச்சர்கள், மாநகராட்சி மேயர் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் தங்கள் பகுதிக்கு தேவையான திட்டங்கள், வசதிகள், கோரிக்கைகள் தொடர்பாக குழுவினரிடம் மனுக்களை அளித்தனர்.

விரைவாக அறிக்கை தயாரிப்பு: தொடர்ந்து கனிமொழி எம்.பி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ''திமுக தேர்தல் அறிக்கை குழு தூத்துக்குடியில் குழு முதன்முதலாக பணிகளை தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தொழில் துறையினர், விவசாயிகள் என்று பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். ராமநாதபுரத்தில் இருந்து மீனவர்கள், தென்னை விவசாயிகள், மிளகாய் விவசாயிகள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். விருதுநகரில் இருந்து பட்டாசு தொழிலில் உள்ளவர்கள், தூத்துக்குடி உப்பு தொழிலாளர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளார்கள்.

இந்த கருத்துகளை எல்லாம் ஒருங்கிணைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். இந்த குழு 10 மாவட்டங்களில் கூட்டங்களை நடத்துகிறது. அதனை முடித்தவுடன், தேர்தல் அறிக்கையை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு நல்ல அரசாக, மக்களை மதிக்க கூடிய அரசாக, மாநில உரிமைகளின் மீது நம்பிக்கை இருக்க கூடிய அரசாக வர வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு மக்கள் உள்ளனர். தூத்துக்குடி, சென்னை வெள்ள பாதிப்புகளுக்கு கூட மத்திய அரசு எந்த நிதியுதவியும் செய்யவில்லை. இப்படிப்பட்ட சூழலில் மக்கள், மத்தியில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்ற உறுதியோடுதான் எங்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் முதல்வருக்கு தெரிவிக்கப்படும். மக்களவை தேர்தலில் யார் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என்று கட்சித் தலைவர் மட்டும் தான் அறிவிக்க முடியும். அதன்படி முதல்வர் அறிவிப்பார். இவ்வாறு கனிமொழி எம்.பி கூறினார். திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் நாளை (பிப்.6) கன்னியாகுமரியிலும், நாளை மறுநாள் (பிப்.7) மதுரையிலும், 8-ம் தேதி தஞ்சையிலும், 9-ம் தேதி சேலத்திலும், 10-ம் தேதி கோவையிலும், 11-ம் தேதி திருப்பூரிலும், 21, 22, 23 தேதிகளில் சென்னையிலும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்கின்றனர். இந்த கருத்துக்கள் ஆய்வு செய்யப்பட்டு தேர்தல் அறிக்கையாக இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும் என திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்