சென்னை: "மறைந்த முதல்வர் எம்ஜிஆர் குறித்து தான் பேசியது தவறு என்பதை உணர்ந்து மன்னிப்பு கேட்க மனமில்லாமல் திமிரோடு நடக்கும் ஆ.ராசாவைக் கண்டித்து, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அவிநாசியில், அதிமுக சார்பில், பிப்ரவரி 9-ம் தேதி, தனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பதை மெய்ப்பிக்கும் வகையிலும்; ‘வாய்க் கொழுப்பு சீலையில் வடிகிறது’ என்பது போலவும்; தான் வகித்த அமைச்சர் பதவிக்கும், தற்போது வகிக்கும் எம்.பி, பதவிக்கும் தகுதியற்ற, தரமற்ற, தற்குறி புத்திகொண்ட ‘ஆ.ராசா’ என்ற நாலாந்தரப் பேர்வழி, தமிழக மக்களின், அதிமுகவின் காவல் தெய்வம் ‘பாரத் ரத்னா’மறைந்த முதல்வர் எம்ஜிஆரைப் பற்றி குக்கல் குரலில் குரைத்திருக்கிறது.‘கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை’ என்று கிராமப் புறங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். மறைந்த முதல்வர் எம்ஜிஆரைப் பற்றி இந்த 2ஜி புகழ் பிறவி உணராததில் ஆச்சரியம் இல்லை.
இன்றைக்கு பதவிச் சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கட்சி, 1967-ல் ஆட்சிப் பீடம் ஏறுவதற்கு எம்ஜிஆர் செய்த தியாகம்தான் காரணம் என்பதை இவர் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், அன்றைக்கு இந்த ஜென்மம் 4 வயதில் அரைக்கால் சட்டை கூட இல்லாமல் அலைந்திருக்கும்.இந்த நபர், தலைவராக ஏற்றுக்கொண்ட கருணாநிதியும், அவரது குடும்பமும் கடன் தொல்லையால் தவித்த போது, அவரது மருமகன் முரசொலி மாறன் பெயரில் தயாரிக்கப்பட்ட ‘எங்கள் தங்கம்’ என்ற திரைப்படத்தில் இலவசமாக நடித்துக் கொடுத்து, அந்த குடும்பத்தையே வாழவைத்த தெய்வங்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் என்பது இந்த அறிவிலிக்கு தெரிந்திருக்காது.
இந்த உண்மையை படத்தின் நூறாவது நாள் விழாவில் கருனாநிதியும், அவரது அன்பிற்கினிய மாறனும் பேசியதாக அன்றைய முரசொலியில் வெளிவந்ததை இவர் படித்திருக்கமாட்டார்.ஆ.ராசா 1963-ம் ஆண்டு பிறந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. திமுக ஆட்சிக்கு வரும்போது அவரது வயது 4. எனவே, எம்ஜிஆரின் அருமை, பெருமைகளை அறிய வாய்ப்பில்லை. திமுக 1967-லும், தொடர்ந்து 1971-லும் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு எம்ஜிஆர் எப்படி சுற்றிச் சுழன்று பணியாற்றினார் என்பது இவருக்குத் துளியளவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
» ‘டார்கெட் தென்னிந்தியா' - பாஜகவின் மிஷன் எடுபடுமா? - ஒரு பார்வை
» தேர்தல் பணி, பிரச்சாரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், ``என்னை வாழ வைத்த தெய்வம் எம்ஜிஆர்’’ என்று சொன்னபோது, ஏன் இவ்வாறு சொல்கிறீர்கள் என்று கேட்டுத் தெரிந்திருந்தால், இந்த ஆ.ராசா, புத்தி பேதலித்துப் போய் உளறியிருக்கமாட்டார். 2ஜி அலைக்கற்றையில் ஊழல் செய்து லட்சம் கோடிகளை சம்பாதித்து சிக்காமல் தப்பிவிட்டோம் என்ற இருமாப்பில், யாரைப் பற்றி விமர்சிக்கிறோம் என்பதைக்கூட உணராமல் பிதற்றி இருக்கும் ஆ.ராசா மீது, 2 கோடிக்கும் மேற்பட்ட எம்ஜிஆரின் பக்தர்களும், அவரைக் கடவுளாக பூஜிக்கும் கோடானு கோடி தமிழக மக்களும் கடும் கோபம் கொண்டிருக்கிறார்கள்.
ஆட்டைக் கடித்து... மாட்டைக் கடித்து... மனிதனைக் கடிக்கும் புத்திகொண்ட ஆ.ராசாவுக்குத் தக்க பாடம் புகட்டும் வரை, அதிமுக ஓயாது. ``யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு’’என்ற திருக்குறளை நினைவுபடுத்தி அவரை எச்சரிக்கிறேன். தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து மன்னிப்பு கேட்க மனமில்லாமல் திமிரோடு நடக்கும் ஆ.ராசாவைக் கண்டித்து, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அவிநாசியில், அதிமுகவின் சார்பில், பிப்.9ம் தேதி வெள்ளிக் கிழமை காலை 9 மணியளவில், எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், எம்ஜிஆரின் பக்தர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago