அனைத்தையும் 12 பெட்டி ரயில்களாக மாற்ற வேண்டும்: சென்னை - அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மக்கள் கோரிக்கை

By மு.வேல்சங்கர்

சென்னை: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில், கூட்ட நெரிசலை தவிர்க்க 8 பெட்டிகளைக் கொண்ட ரயில்களுக்கு பதிலாக, 12 பெட்டிகளைக் கொண்ட ரயில்களை முழுமையாக இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். “12 பெட்டிகள் கொண்ட புதிய மின்சார ரயில்கள் வரும்போது, சென்னை மற்றும் புறநகரில் 9 பெட்டிகள் கொண்ட ரயில்கள் படிப்படியாக நீக்கப்படும்" என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புறநகர் ரயில் சேவை சென்னையில் பொது போக்குவரத்தின் இதயமாக புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து உள்ளது. சென்னை கடற்கரை - தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு, சென்னை மூர் மார்க்கெட் வளாகம் - அரக்கோணம் மற்றும் கும்மிடிப் பூண்டி உட்பட பல்வேறு வழித்தடங்களில் தினசரி 670-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயங்குகின்றன.

இதில், சென்னை மூர்மார்க்கெட் வளாகம் - அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி வழித்தடம் முக்கியமானதாக இருக்கிறது. இந்தத் தடத்தில் 350-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் தினசரி இயக்கப்படுகின்றன. குறிப்பாக, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

நாள்தோறும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இந்த ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இந்த வழித்தடத்தில் முன்பு, 8 பெட்டிகளைக் கொண்ட ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, கடந்த 2018-ம் ஆண்டு 12 பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது, 2 ஆண்டுகளுக்குள் இந்த வழித்தடத்தில் அனைத்து ரயில்களும் 12 பெட்டிகள் கொண்ட ரயில்களாக மாற்றப்படும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதுவரை அனைத்து ரயில்களும் 12 பெட்டிகளைக் கொண்ட ரயில்களாக மாற்றப்படவில்லை. இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.அரக்கோணம், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி அலுவலக நேரங்களில் (பீக் அவர்ஸில்) 8 பெட்டிகள் கொண்ட மெமு ரயில்களும், 9 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்களும்தான் அடிக்கடி இயக்கப்படுகின்றன.

இதனால், கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். அனைத்து ரயில் நிலையங்களிலும் 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள் நின்று செல்லும் வகையில் நடைமேடைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இன்னமும் 8 அல்லது 9 பெட்டி ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். இடப்பற்றாக்குறையால் பயணிகள் சிலர் படியில் தொங்கி, ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். சிலர் கீழே விழுந்து படுகாயமடைகின்றனனர்.

இதுகுறித்து திருவள்ளூர் ரயில் பயணிகள் நலச்சங்க செயலாளர் கே.பாஸ்கர் கூறியது: தினசரி காலை, மாலை நேரங்களில் (பீக் அவர்ஸில்) ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. அந்த நேரத்தில், 8 பெட்டிகளைக் கொண்ட மெமு அல்லது 9 பெட்டிகளைக் கொண்ட ரயில்கள் அதிகமாக இயக்கப்படுகின்றன. சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, புட்லூர், நெமிலிச்சேரி, இந்துக்கல்லூரி, அண்ணனூர், திருமுல்லைவாயில், பட்டரவாக்கம், கொரட்டூர் உட்பட பல ரயில் நிலையங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யும் வசதி போதிய அளவு இல்லாததால், வருவது 8 பெட்டிகளைக் கொண்ட ரயிலா அல்லது 12 பெட்டிகளைக் கொண்ட ரயிலா என்று பயணிகள் அறிய முடிவதில்லை. இதனால், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் உள்ளிட்டோர் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

புறநகர் ரயில் வழித்தடத்தில் குறுகலான நுழைவாயில் மற்றும் அகலம் குறைவான 8 பெட்டிகள் கொண்ட மெமு ரயில்கள் இயக்குவதை நிறுத்த வேண்டும். ஏனெனில், ஒரு மெமு ரயில், நிலையத்தில் நின்று செல்லும் 30 நொடியில் ஏறி இறங்குவதற்குள் பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.

சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் அனைத்து மின்சார ரயில்களும் 12 பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. அதுபோல, சென்னை மூர்மார்க்கெட் வளாகம் - அரக்கோணம் மார்க்கத்திலும் அனைத்து ரயில்களும் 12 பெட்டிகளைக் கொண்டவையாக இயக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பொன்னேரி ரயில் பயணிகள் சங்க நிர்வாகி பிரதாப் கூறும்போது, "சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் நெரிசல் மிகுந்த நேரங்களில் (பீக் அவர்ஸில்) 8 பெட்டிகள், 9 பெட்டிகள், 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள்தான் இயக்கப்படுகின்றன. அனைத்தையும் 12 பெட்டிகள் கொண்ட ரயில்களாக இயக்க வேண்டும் என்பது எங்கள் நீண்டகால கோரிக்கை. இதை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும்" என்றார்

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியது: சென்னை மூர்மார்க்கெட் வளாகம் - அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் பல ரயில் நிலையங்களில் நடைமேடைகளின் நீளம் சிறியதாக இருந்தது.12 பெட்டிகள் கொண்ட ரயில்களை நிறுத்தும்போது, நடைமேடையை கடந்து வெளியே நிற்கும். அதன்பிறகு, இந்த மார்க்கங்களில் ஒரு சில ரயில் நிலையங்களை தவிர அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடைகளில் 12 பெட்டிகளைக் கொண்ட ரயில்கள் நிறுத்தும் விதமாக, மேம்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது, 9 பெட்டிகள் கொண்ட ரயில், 12 பெட்டிகளைக் கொண்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. படிப்படியாக 12 பெட்டிகளைக் கொண்ட ரயில்கள் அதிகரிக்கப்படும். 12 பெட்டிகள் கொண்ட புதிய மின்சார ரயில்கள் வரும்போது, சென்னை மற்றும் புறநகரில் 9 பெட்டிகள் கொண்ட ரயில்கள் படிப்படியாக நீக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்