புற்றுநோய் பாதிப்பில் ஈரோடு முதலிடம் - விழிப்புணர்வு நிகழ்வில் மருத்துவர் தகவல்

By எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு: தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஈரோடு முதலிடத்தில் உள்ளதாக புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சுகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை ஒட்டி, ஈரோடு இந்திய மருத்துவ சங்கம் மற்றும் சுதா மருத்துவமனை சர்பில் புற்று நோய் விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஈரோடு காலிங்கராயன் இல்லத்திலிருந்து எஸ்பி ஜவகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுதா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சுதாகர், ஐஎம்ஏ முன்னாள் தலைவர் டாக்டர் சுகுமார், செல்வா சாரிட்டபிள் டிரஸ்ட் தொண்டு நிறுவன தலைவர் பாரதி, நந்தா நர்சிங் கல்லூரி தாளாளர் நந்த குமார், பிரதீப் நர்சிங் கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சுகேஸ்வரன், இந்தியாவில் புற்றுநோய்கள் அதிகம் பாதித்த மக்கள் உள்ள மாநிலங்களில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் புற்றுநோய் அதிகம் கொண்ட மாவட்டமாக முதலிடத்தில் உள்ளது. புகையிலை, மது, சரியான உடற்பயிற்சி இன்மை, சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால் புற்றுநோய் வருகிறது. கடந்த காலங்களில் 40 முதல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டது. தற்போது 20 வயதிலேயே புற்றுநோய் ஏற்படுகிறது. அதில் 50 முதல் 60 சதவீத மக்கள் மூன்றாவது அல்லது நான்காவது கட்டத்தை எட்டிய பின், காலதாமதமாகத்தான் புற்றுநோய் பாதிப்பை அறிகிறார்கள். முற்றிய நிலையில் புற்றுநோய் சிகிச்சைக்கு வருகின்றனர். ஆரம்ப கட்டத்திலேயே புற்று நோயை கண்டறிவது அவசியம்" என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE