ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்: அமித் ஷாவை சந்திப்பதாக தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வரும் பிப். 12-ம் தேதி தொடங்குகிறது. மரபுப்படி ஆண்டு முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவார். ஏற்கெனவே தமிழக அரசு -ஆளுநர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவும், கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடித்து வைக்கப்படாததாலும், இந்த ஆண்டு கூட்டத்துக்கு ஆளுநர் அழைக்கப்படுவாரா என்ற சந்தேகம் நிலவி வந்தது.

இந்த சூழலில், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி, நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர் ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்தும், அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை ஆளுநர் தெரிவித்து வந்தார். எனினும்,சட்டப்பேரவை கூட்டத்தொடரை சமீபத்தில் முடித்து வைத்து ஆளுநர் உத்தரவிட்டார். தொடர்ந்து, பேரவையின் இந்த ஆண்டு கூட்டத் தொடரைதொடங்கவும், அதில் உரையாற்றவும் ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து, பிப்.12-ம்தேதி காலை 10 மணிக்குதமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றுகிறார். 2023 ஜனவரி மாதம் நடந்தஆண்டின் முதல் கூட்டத்தில் தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை நீக்கியும், சேர்த்தும் ஆளுநர் வாசித்தார். இதையடுத்து, ஆளுநருக்கு எதிராக அவர் இருக்கும்போதே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் பாதியிலேயே வெளியேறினார். அதன்பிறகு, அரசு அளித்த உரையே பதிவு செய்யப்பட்டது.

இந்த ஆண்டு, ஆளுநர் உரைதயாரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநரின் நிலைப்பாடு குறித்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த சூழலில், ஆளுநர் ரவிநேற்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

அவரது பயணம் திட்டமிட்டது. சொந்த விஷயமாக செல்கிறார் என்று கூறப்பட்டாலும், 3 நாட்கள் டெல்லியில் தங்கியிருப்பார் என்றும், உள்துறை அமைச்சர் அமித் ஷாஉள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE