அரசியல் கட்சி தொடங்கிய பிறகு ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்: புதுச்சேரி - கடலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: அரசியல் கட்சி தொடங்கிய பிறகு புதுச்சேரி ஏஎஃப்டி பஞ்சாலையில் படப்பிடிப்புக்காக வந்த நடிகர் விஜய்யை பார்க்க ரசிகர்கள் குவிந்ததால் புதுச்சேரி - கடலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டது.

புதுச்சேரியின் முக்கிய பஞ்சாலையாக விளங்கிய ஏஎஃப்டி மில்,புதுச்சேரி - கடலூர் சாலையில் உள்ளது. ஆலை மூடப்பட்டதால், இந்த வளாகத்தில் தற்போது படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. சமீபத்தில், ‘லால் சலாம்’ படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் இங்கு வந்திருந்தார். இந்நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘கோட்' திரைப்படத்துக்காக ஏஎஃப்டி மில் வளாகத்தில் படப்பிடிப்பு அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக, நடிகர் விஜய் நேற்று மதியம் வந்தார்.

அலைமோதிய கூட்டம்: ‘தமிழக வெற்றி கழகம்' என்றஅரசியல் கட்சி தொடங்கிய பிறகு விஜய் படப்பிடிப்புக்காக வந்ததை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர் ஏஎஃப்டி மில் வளாகம் முன்பு குவிந்தனர். நேரம் ஆக ஆக,ரசிகர்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது. போலீஸாரும் போதிய அளவில் இல்லாததால், சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்கள், தொண்டர்கள் அமைதி காக்குமாறு பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக் கொண்டார். ஆனாலும், விஜய்யை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.

இதற்கிடையே, போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால் வாகனங்கள் அந்த வழியில் செல்ல முடியாமல் திரும்பிச்செல்லத் தொடங்கின. பலரும் விஜய்யைபார்க்க சாலையிலேயே நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

ரசிகர்கள் உற்சாகம்: பின்னர், ஏஎஃப்டி மில் வளாகம் முன்பு பெரிய வேன் நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில், அங்கு வந்த விஜய், வேன்மீது ஏறி ரசிகர்களை பார்த்து கையசைத்தார். விஜய்யை பார்த்தவுடன் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கூச்சலிடத் தொடங்கினர். மலர்களையும், பூ மாலைகளையும் அவரை நோக்கி வீசினர்.

அந்த மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டு விஜய், நன்றி தெரிவித்தார். பின்னர் அந்த மாலைகளை ரசிகர்களை நோக்கி வீசினார். முத்தங்களையும் பறக்கவிட்டார். அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு, மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு திரும்பினார். விஜய்யை பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE