சாதி, மத பிளவுகளுக்கு அப்பாற்பட்ட கட்சி நிலைப்பாட்டில் விஜய் உறுதியாக இருக்கட்டும்: திருமாவளவன் கருத்து

By செய்திப்பிரிவு

மறைமலை நகர்: மறைமலைநகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இணையதள உறுப்பினர் சேர்ப்பு முகாமை தொடங்கி வைத்தார்.

அப்போது கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், காட்டாங்குளத்தூர், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பல்வேறு கட்சிகளைச்சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் தங்களை விசிகவில் இணைத்துக்கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியது: முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர் அத்வானி. மேலும், ஓபிசி மக்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என வன்முறையைத் தூண்டியவர். ரதயாத்திரை என்ற பெயரால் ‘ரத்த யாத்திரை’ நடத்தியவர், பாபர் மசூதி இடிப்பதற்கு முழு முதற்காரணமாக இருந்தவர்.

இந்தியாவில் வெறுப்பு அரசியல் தீவிரமாக வளர்வதற்கு மூலக் காரணமாக இருந்தவர். இந்தியா முழுவதும் இவற்றை பரவச் செய்து அரசியல் ஆதாயம் தேடியவர். மோடி, அமித்ஷா கோலோச்சுவதற்கு அடிக்காரணமாக இருந்தவர்.

அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை, ஜனநாயக சக்திகளால் ஏற்க முடியாது. இந்தியாவில் மதச்சார்பின்மை கொள்கைக்கு, அரசியலமைப்பு சட்டத்தில் ஜனநாயக விழுமியங்களுக்கு மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தியவர். அதற்கு எதிரான உளவியலைக் கட்டமைத்தவர் அத்வானி. அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

‘சாதி, மத பிளவுகளுக்கு அப்பாற்பட்ட கட்சியாகச் செயல்படுவோம்’ என விஜய் அறிவித்தது குறித்து, கருத்து தெரிவித்த திருமாவளவன், ‘விஜய் களத்துக்கு வந்து இந்த நிலைப்பாட்டில் உறுதியாக நின்று பணிபுரியட்டும்’ எனக் கூறி வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

மேலும், மக்களவை தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவிலிருந்து இன்னும் அழைப்பு வரவில்லை, விரைவில் அழைப்பு வரும், மக்களவை கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் கூட்டத் தொடருக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE