பாஜக அல்லாத பிற கட்சிகளை அதிமுக கூட்டணியில் வாசன் இணைத்தால் வரவேற்போம்: டி.ஜெயக்குமார் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: பாஜக அல்லாத பிற கட்சிகளை அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசன் இணைத்தால் அதை வரவேற்போம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோ ஏற்பாட்டில் எம்ஜிஆரின் 107-வது பிறந்தாள் விழாவை முன்னிட்டு, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ராயபுரத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். நாங்கள், எங்கள் தலைமையில் பாஜக அல்லாத கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம்.

யார் என்ன முயற்சி எடுத்து, பாஜகவோடு எங்களை சேர்க்க வேண்டும் என்று நினைத்தாலும் அது வீணான செயலாகும். இந்த விவகாரத்தில் அதிமுக எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கும் எண்ணம் இல்லை. 2021-ம்ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தவிர்த்து நாங்கள் யாருடன் எல்லாம் கூட்டணி வைத்தோமோ, அவர்கள் மீண்டும் கூட்டணியில் வருவதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

ஜி.கே.வாசன், பாஜக அல்லாத பிற கட்சிகளை கொண்டு வந்து, எங்கள் கூட்டணியோடு இணைத்தால் வரவேற்க தகுந்த விஷயமாக இருக்கும்.

பாஜகவை எதிர்த்துவிட்டு, பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது. திமுகவினரை சிறையில் தள்ளி மிதித்தவர்தான் இந்திராகாந்தி. பின்னர் நேருவின் மகளே வருகே என கருணாநதி வரவேற்றார். கூடா நட்பு என்று கூறி திமுக- காங்கிரஸ் பிரிந்தது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு காங்கிரஸை எப்போதுமே பிடிக்காது.

பாஜக, திமுக எதிரிகள்: அதிமுகவின் அரசியல் எதிரிகள் பாஜகவும், திமுகவும்தான். மற்ற யாரும் எங்களுக்கு எதிரி இல்லை. அரசியலில் 24 மணி நேரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எப்போதும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பாஜக இல்லாத மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும். பெரிய கட்சிகள் பல அதிமுகவுடன் பேசி வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE