ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பழைய கொடிமரங்கள் மாயம்

By அ.கோபால கிருஷ்ணன்

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கும்பாபிஷேக பணியின் போது அகற்றப்பட்ட இரு பழைய கொடிமரங்கள் மாயமானது குறித்து பிரசாத கடை ஒப்பந்தம் எடுத்த ராமர் என்பவர் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் கோயில் செயல் அலுவலர் முத்துராஜா புகார் அளித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் முத்துராஜா மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளரிடம் கடந்த 29-ம் தேதி புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ' ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கடந்த 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்த போது ஆண்டாள் சந்நிதி, வடபத்ரசயனர் சந்நிதி, பெரியாழ்வார் சந்நிதி முன் இருந்த கொடிமரங்கள் அகற்றப்பட்டு, புதிதாக 3 கொடிமரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அகற்றப்பட்ட பழைய கொடிமரங்களில் தற்போது 1 மட்டுமே கோயிலில் உள்ளது. மற்ற 2 கொடிமரங்களும் கோயிலில் இருந்து சட்ட விரோதமாக எடுத்து செல்லப்பட்டு உள்ளது. அந்த கொடிமரங்களில் பழமையான செப்பு தகடுகள் பொருத்தப்பட்டு இருந்துள்ளது. மாயமான கொடிமரங்கள் குறித்து விசாரணை நடத்தியதில், கோயிலில் பெயிண்டிங் அடிக்கும் ஒப்பந்ததாரர் கோமதிநாயகம் என்பவர் இரண்டு கொடிமரங்களையும் கோயிலில் பிரசாத கடை ஏலம் எடுத்து நடத்தி வரும் ரமேஷ் (எ) ராமர், அவரது சகோதரர் மாரிமுத்து உள்ளிட்டோர் லாரி மூலம் கொண்டு சென்றதாக தெரிவித்தார். பிரசாத கடை ராமர் என்பவரை விசாரணை செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மற்றொரு புகார் மனுவில், ஆண்டாள் கோயில் கல்யாண மண்டபத்தில் மணமேடையில் படிகளின் இருபுறமும் இருந்த கல்லால் ஆன ஒரு யானை சிலைகள் கடந்த 2008 - 2009 காலத்தில் சட்டவிரோதமாக அகற்றப்பட்டு உள்ளது. அந்த சிலைகள் யாரால் அகற்றப்பட்டது என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ஆண்டாள் கோயிலில் ஆய்வு செய்து விட்டு சென்றனர். கோயிலில் இருந்த பழமையான கொடி மரங்கள் மற்றும் சிலைகள் மாயமானது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE