நெகிழி குடுவைகவைகளில் பல்லுயிர்களுக்கு தண்ணீர், தானியம்: விழிப்புணர்வு ஏற்படுத்தும் மதுரை இளைஞர் 

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: கோடைகாலம் தொடங்கிவிட்டதால் பறவைகள் உள்ளிட்ட பல்லுயிர்களை பாதுகாக்க, தண்ணீர், தானியம் வைக்க பொதுமக்கள் தூக்கி வீசும் நெகிழி குடுவைகள் தயார் செய்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு செய்து வருகிறார் இளைஞர் ஒருவர்.

குளிர்காலம் முடிந்து மதுரை மட்டுமில்லாது தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தற்போது கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக தொடங்கியுள்ளது. இந்த சூழலில் பல்லுயிர்கள் (பறவைகள், அணில்கள், சிறு உயிரினங்கள்) தண்ணீர் கிடைக்க மிகவும் சிரமப்படுகின்றன. மனிதன் தண்ணீர் குடித்துவிட்டு சாலையில் தூக்கி வீசிய நெகிழிக்குடுவைகள் மண்ணிற்குள் சென்று மக்காத நிலை ஏற்படும் முன் அவற்றினை சேகரித்து, அவற்றில் தானியங்கள், மற்றும் தண்ணீர் நிரப்பி நாம் தினமும் செல்லக்கூடிய பகுதிகளில் மரங்களில் வைத்து வரும் பணியை மதுரை பகுதியில் பசுமை செயற்பாட்டாளர் ஜி.அசோக்குமார் செய்து வருகிறார்.

அவர், இப்பணியை பள்ளி மாணவர்களிடம் எடுத்து சென்று அவர்கள் முன்னிலையில் நெகிழி பைகளை சேகரித்து, அதை எப்படி பல்லுயிர்களை பாதுகாக்கலாம் என்ற விழிப்புணர்வை செய்து வருகிறார். நேற்று அவர் சேவாலயம் மாணவர்கள் இல்லத்தில் மாணவர்களுக்கு நெகிழி குறித்து எடுத்துரைத்து இந்த பசுமை பணியை மேற்கொண்டார். ''இப்பசுமைப் பணியின் மூலமாக பல்லுயிர்களும் பயன்பெறும் இயற்கையினை பாதுகாக்க முடியும்'' என ஜி.அசோக்குமார் கூறி வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE