திருப்பத்தூர் அருகே 4 கி.மீ. நடந்து சென்று ஆற்றில் ஊற்று தோண்டி தண்ணீர் எடுக்கும் பெண்கள்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே 4 கி.மீ. வனப்பகுதியில் நடந்து சென்று ஆற்றில் ஊற்று தோண்டி கிராம மக்கள் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சோலுடையான்பட்டி கிராமத்தில் 120-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் நிலத்தடி நீர் உவர்ப்பாக உள்ளதால், அதை குடிக்க முடியவில்லை. இதனால் கிராம மக்கள் விளைநிலங்கள், வனப்பகுதி பகுதியில் 4 கி.மீ. நடந்து சென்று மணிமுத் தாற்றில் ஊற்றுத் தோண்டி குடிநீர் எடுக்கின்றனர். சிறிது, சிறிதாக கிண்ணத்தில் அள்ளுவதால் ஒரு குடம் பிடிக்க அரை மணி நேரம் காத்திருக்கின்றனர்.

கோடை காலங்களில் மேலும் சில மணி நேரம் காத்திருந்து தண்ணீர் எடுக்கின்றனர். மேலும் வனப் பகுதியில் செல்ல அச்சமாக இருப்பதால் காலை, மாலை இருவேளை மட்டும் ஒரே சமயத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றாக சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். குடிநீர் பிரச்சினையை தீர்க்க அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில் ‘‘தினமும் குடிநீர் எடுத்து வரவே பல மணி நேரம் ஆவதால் எங்களால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. சில நேரம் எங்களை குழந்தைகளை அனுப்புகிறோம். இதனால் அவர்கள் படிப்பும் பாதிக் கப்படுகிறது. எங்கள் பகுதி குடிநீர் பிரச்சினையை அமைச்சர் தீர்க்க வேண்டும். வசதியானவர்கள் ஒரு குடம் நீர் ரூ. 15 கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE