தேச விரோத செயல்களில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டதை என்ஐஏ சோதனை காட்டுகிறது: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

By செய்திப்பிரிவு

கோவை: தேசத்துக்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த சோதனை காட்டுகிறது. தமிழக காவல்துறைக்கூட அவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. நாம் தமிழர் கட்சியினரின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து என்ஐஏ நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் நாம் தமிழர் கட்சியினர் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்தியிருப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இது மிகப்பெரிய கவலைக்குரிய விசயம். அதாவது தேசத்துக்கு எதிரான ஒற்றுமை அல்லது தேசத்துக்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த சோதனை காட்டுகிறது.

தமிழக காவல்துறைக்கூட அவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினரின் நடவடிக்கை மற்றும் செயல்பாடுகளைத் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்தபிறகு, அவர்கள் நாட்டுக்கு எதிரான செயல்களை செய்ததை உறுதிப்படுத்திய பிறகு, என்ஐஏ அவர்களது வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர். அவர்களை கைது செய்ய உள்ளனர். அந்தவகையில், என்ஐஏ அமைப்பு அவர்களது வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களிடம் சென்று கேள்வி கேட்கும்போது, அவர்கள் தங்களை மிரட்டுவதாகவும், தங்களை காப்பாற்றுங்கள் எனக்கூறும் அலறல் சத்தத்தை நாம் கேட்டிருப்போம். அப்படியான அலறலைத்தான் தவறு செய்தவர்கள் இந்த விவகாரத்தில் செய்து கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE