கிளாம்பாக்கத்தில் ரூ.14.30 கோடியில் புதிய காவல் நிலையம்

By செய்திப்பிரிவு

கிளாம்பாக்கம்: வண்டலூருக்கு அருகில் உள்ள கிளாம்பாக்கத்தில் டிச. 30-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.

இந்நிலையில் கிளாம்பாக்கத்தில் காவல் நிலையம் திறக்க ரூ.6.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது. காவல் நிலையமும் தொடக்கப்பட்டு விட்டது. இந்த காவல் நிலையத்தில் 2 காவல் ஆய்வாளர்கள், 6 உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், முதல் நிலைக் காவலர்கள், இரண்டாம் நிலை காவலர்கள் என 71 பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அனைவரும் பணியில் சேர்ந்து விட்டனர். காவல் நிலையத்துக்கு 2 ஜீப், 7 மோட்டார் சைக்கிள்கள் வாங்கப்படும்.

அதே போல மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு ரூ.3,27,800, ஸ்கேனர், வாக்கி டாக்கி, வயர்லஸ் கருவிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்குவதற்கு ரூ.5,85,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் ஜீப், மோட்டார் சைக்கிள், வாக்கி டாக்கி, வயர்லஸ் கருவிகள் போன்றவை எதுவும் வழங்கப்படவில்லை. காவல் நிலையமும் கட்டப்படவில்லை. புற காவல் நிலையத்தில் தான் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. போலீஸாருக்கு அடிப்படை வசதி இல்லாமல் உள்ளது.

இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ரூ14.30 கோடி மதிப்பீட்டில் புதிய காவல் நிலையம் கட்டுமான பணிகளுக்கு பிப். 5-ம் தேதி ( நாளை ) அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர் பாபு பணிகளை தொடங்கி வைக்க உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE