‘‘சட்டம் பயிலும் பெண்கள் பாஞ்சாலி, கண்ணகி போல் வரவேண்டும்’’ - ப.சிதம்பரம் பேச்சு @ காரைக்குடி

By இ.ஜெகநாதன்


காரைக்குடி: ‘‘சட்டம் படிக்கும் பெண்கள் பாஞ்சாலி, கண்ணகி போல் வர வேண்டும்’’ என காரைக்குடி அரசு சட்டக் கல்லூரி பூமிபூஜையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 2 ஆண்டுகளுக்கு முன் அரசு சட்டக் கல்லூரி அறிவிக்கப்பட்டு, தற்காலிகமாக அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. தற்போது 285 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், அரசு சட்டக் கல்லூரி காரைக்குடி கழனிவாசல் பகுதியில் ரூ.100.42 கோடியில் 19.2 ஏக்கரில் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கார்த்தி சிதம்பரம் எம்பி, மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித், சட்டத்துறை செயலர் ஜார்ஜ் அலெக்சாண்டர், சட்டக்கல்வி இயக்குநர் விஜயலட்சுமி, எம்எல்ஏக்கள் மாங்குடி, தமிழரசி, கல்லூரி முதல்வர் ராமபிரான் ரஞ்சித்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அமைச்சர் ரகுபதி பேசியது: “அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் அதிகளவில் மாணவிகள் படித்து வருகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பான படிப்பு சட்டம் என முடிவெடுத்து பெற்றோர் தங்களது பிள்ளைகளை சட்டக் கல்லூரிகளில் சேர்க்கின்றனர். அரசு சட்டக் கல்லூரிகளில் பயின்றவர்கள் சோடை போவது கிடையாது. சிறந்த வீரர், வீராங்கனைகளாக வெளியே வருகின்றனர். வாதத்தை முன் வைப்பது, மறுப்பது, தீர்ப்பு சொல்வது என 3 விஷயங்களும் ஒருசேர உள்ள படிப்பு சட்டப்படிப்பு மட்டும் தான்.

மக்கள் நம்புவது நீதிமன்றத்தைத் தான். நீதிமன்றம் குறித்து விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது” என்று அவர் பேசினார்.

ப.சிதம்பரம் பேசும்போது, “எந்த துறையையும் சட்ட அறிவில்லாமல் நடத்த முடியாது. சட்ட அறிவு இல்லாமல் பொறுப்புகளை நிர்வகிக்க முடியாது. சட்டம் படித்தால் அனைத்து துறைகளுக்கும் செல்லலாம். முதல் பெண் வழக்கறிஞர் 'மகாபாரதம் பாஞ்சாலி' தான். அதற்கு அடுத்த வழக்கறிஞர் கண்ணகி. சட்டம் படிக்கும் பெண்கள் பாஞ்சாலி, கண்ணகி போல் வர வேண்டும்.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த திமுக ஆட்சியில் மருத்துவக் கல்லூரி வந்தது. அதேபோல் தற்போது வேளாண்மை, சட்டக் கல்லூரி வந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒன்றும் வரவில்லை. காரைக்குடி செட்டிநாடு பகுதியில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்க அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முயற்சி எடுக்க வேண்டும்.

புதிய சட்டக் கல்லூரி கட்டிடத்தை தரமாக கட்ட வேண்டும். கடந்த 1857-ம் ஆண்டு கட்டப்பட்ட சென்னை உயர் நீதிமன்றம், தற்போதும் உறுதியாக உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், கட்டப்பட்ட கல்லணையும் உறுதியாக உள்ளது. கடந்த 2014-15-ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் திருவள்ளூர் வட்டம் பட்டறைப்பெரும்புதூரில் சட்டக் கல்லூரி கட்டி உள்ளனர். மிக மோசமாக உள்ளது.

அரசு கட்டிடம் என்பது 20 முதல் 25 ஆண்டுகள் தான் இருக்கும் என்பது போல் நமக்கு பழகிவிட்டது. அது தவறு. அரசு கட்டிடம் தனியாரை போன்று 100 முதல் 150 ஆண்டுகள் வரை நிலைத்திருக்க வேண்டும். முறையான பராமரிப்பு இருந்தால் நிற்கும். எங்கள் பகுதியில் சிமென்ட் இல்லாமல் சாந்து கலவை மூலம் கட்டிய வீடுகள் 120 ஆண்டுகளை தாண்டியும் இன்றும் கம்பீரமாக அழகாக நிற்கிறது. கோயிலுக்கு ஈடானது பள்ளிக்கூடம், அதுபோன்று கல்லூரியும் கோயில்தான். ஒப்பந்ததாரர் கல்லூரி கட்டிடத்தை தரமாக கட்ட வேண்டும்" என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE