நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம்: ரசிகர்கள் கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னை: நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ளார். இதையொட்டி, பல்வேறு கட்சித் தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: மதம், சாதி இல்லாத சூழலை உருவாக்கப் போவதாக நடிகர் விஜய் கூறியுள்ளார். யாரும் மதம், சாதி பாகுபாடு பார்ப்பதில்லை. அதிகமானோர் அரசியலுக்குவர வேண்டும். கல்லூரி மாணவர்களிடையே பேசும்போது, ‘அரசியலுக்கு வாருங்கள்’ என்று தான் சொல்கிறேன். தமிழகத்துக்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். நடிப்பவர்களும் அரசியலுக்கு வரலாம். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் தலைவராக இருக்க வேண்டும் என்பதில்லை. நிறைய இளைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். அதனால் விஜய் அரசியலுக்கு வந்ததை நான் வரவேற்கிறேன்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்க உரிமை இருக்கிறது. நடிகர் விஜய்க்கு எனது பாராட்டுகள். அவரது மக்கள் பணி சிறக்கட்டும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: தமிழக மக்களை சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்யை வாழ்த்தி, வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

திருவள்ளூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய ரசிகர்கள்.
படம்: இரா.நாகராஜன்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: புதிய கட்சியைத் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்க்கு எனது இதயபூர்வமான வாழ்த்துகள். சவால்களை சமாளித்து அவர் தமிழக அரசியலில் வலம் வருவார் என நம்புகிறேன்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அரசியல் என்பது பெருங்கடல். இதில் நீந்தி கரை சேர்ந்தவர்களும் உண்டு, மூழ்கிப் போனவர்களும் உண்டு. நடிகர் விஜய் நீந்தி கரை சேருவாரா அல்லது மூழ்கிப் போவாரா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: திரைப்படத் துறையில் மிகுந்த செல்வாக்குடன் கலைப்பணி ஆற்றும் விஜய், அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டிருப்பதை வாழ்த்தி வரவேற்கிறேன். மக்களை பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராகவும், மக்களின் வளர்ச்சிக்கு தடையாகவும் இருக்கிற சக்திகளுக்கு எதிராக அவர் கருத்து கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

விசிக தலைவர் திருமாவளவன்: ஜனநாயகத்தில் மக்கள் தொண்டாற்றுவதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. யாரும், எந்த நேரத்திலும் அரசியலுக்கு வரலாம். பொதுமக்களுக்கு தொண்டாற்றலாம். அந்தவகையில் நடிகர் விஜய் கட்சியைத் தொடங்கியுள்ளது வரவேற்புக்குரியது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்துகள் முற்போக்கான சிந்தனைகளுடன் இருப்பதாக நம்புகிறேன். அதை வரவேற்கிறேன்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: நடிகர் விஜய் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்ற பெயர், நல்ல பெயராக அமைந்திருக்கிறது. கட்சியின் பெயரில் திராவிடம் என்ற வார்த்தை இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி. மாநில கட்சி மாநிலத் தேர்தலில்தான் கவனம் செலுத்த வேண்டும்.

சமக தலைவர் ரா.சரத்குமார்: நடிகர் விஜய் கலந்தாலோசித்து, தீர்க்கமான முடிவு எடுத்த பிறகுதான் அரசியலில் இறங்கி இருக்கிறார் என்று கருதுகிறேன். அவருக்கு எனது வாழ்த்துகள்.

புதுச்சேரி அண்ணா சிலை பகுதியில், பொதுமக்களுக்கு இனிப்புகள், ஏழை,
எளியவர்களுக்கு போர்வை உள்ளிட்டவற்றை வழங்கிய விஜய் ரசிகர்கள்.
படம்: எம்.சாம்ரா ஜ்

அமைதிக்குப் பின் அரசியல் புரட்சி - ‘வாகை சூடு விஜய்’ மகனுக்கு ஷோபா சந்திரசேகர் வாழ்த்து

சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதற்கு வாழ்த்து தெரிவித்த அவரது தாயார் ஷோபா சந்திரசேகர், விஜய்யின் அமைதிக்கு பின் அரசியல் புரட்சி இருக்கும். ‘வாகை சூடு விஜய்’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: விஜய் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு இதுவரை இயல்பாக பதில் சொல்லியிருக்கிறேன்.

ஆனால் இன்று ஒரு அம்மாவாக மட்டுமின்றி சமூக பொறுப்புள்ள ஒரு பெண்மணியாகவும் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. அரசியல் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்று கூறமாட்டேன். ஒவ்வொரு குடிமகனுக்கும், குடிமகளுக்கும் அரசியல் பொறுப்பு என்பது இருக்கிறது.

அந்தவகையில் அனைத்து குடிமக்களின் அபிமானத்தை பெற்ற விஜய் மாதிரியான ஆளுமைக்கு அரசியலில் நுழைய வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். புயலுக்கு பின் அமைதி என்பது போல, விஜய்யின் அமைதிக்குப் பின் ஒரு அரசியல் புரட்சி நிச்சயம் இருக்கும். தமிழக வெற்றி கழகம் எனும் பெயருக்கு ஏற்ப தமிழகத்தில் அவருடைய கட்சி வெற்றி பெறும்.

நடிகர் விஜய் கட்சி தொடங்கியதை அடுத்து, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்
பகுதியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவரது ரசிகர்கள்.
படம்: ர.செல்வமுத்துகுமார்

விஜய்க்கு மதம், சாதி போன்றவற்றில் விருப்பம் இல்லை. அவருக்கு பின்னாடி நிற்கும் அனைவரும் வாழ்வில் முன்னாடி வரவேண்டும் என்று நினைப்பவர். அதன்படி இன்று அவருடைய ரசிகர்கள் தொண்டர்களாக மாறியுள்ளனர். விரைவில் தலைவர்களாகவும் மாறப் போகின்றனர். மகனுக்கு ஓட்டு போடவிருக்கும் அம்மாவாக எனக்கென தனி சந்தோஷம் இதில் இருக்கிறது. வாகை சூடு விஜய். வாழ்த்துகள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வ.உ.சி.சாலையில், வடக்கு மாவட்ட
விஜய் மக்கள் இயக்கத் தலைவர் ஜோசப் தங்கராஜ் பேருந்தில்
பயணிகளுக்கு லட்டு வழங்கினர்.

தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள்... நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது:

சின்னத்துரை (திருநெல்வேலி - காவலாளி) - தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால், நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பித்தால் அதை வரவேற்போம். நடிகராக இருந்துகட்சி ஆரம்பித்து அதில், எம்.ஜி.ஆரை தவிரயாரும் வெற்றி அடையவில்லை. விஜய் என்ன கொள்கைகளை முன்னெடுத்து வருகிறார் என்பதை பார்த்து தான், விஜய் ஆட்சிக்கு வர வேண்டுமா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

கார்த்திகா சுவர்ண இலக்கியா (தூத்துக்குடி, குடும்பத்தலைவி): இன்றைய சூழலில் விஜய் அரசியலுக்கு வருவது, இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தும் என நினைக் கிறேன். மக்களுக்கு விஜய் உதவுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தமிழக அரசியலில் இரு கட்சிகளுக்கே நாம் வாய்ப்பு வழங்கி கொண்டு இருக்கிறோம். ரஜினி போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக கூறி இறுதியில் பின் வாங்கிய நிலையில், தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட விஜய்க்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்.

நித்யா (நாமக்கல், செவிலியர்) - விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். ஆனால், விஜயகாந்த் செய்த தவறை விஜய் செய்யக்கூடாது. அதாவது, எப்போதும், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல், தமிழகத்தில் விஜய் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

ஊடகங்களுக்கு பேட்டிகள் கொடுப்பதை தவிர்த்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நேரடியாக மக்களைச் சந்தித்து, ஆதரவை பெற வேண்டும்.

பிரியங்கா (மதுரை, கல்லூரி மாணவி) - நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்க முடிவாகும். திரையுலகில் உச்சத்தில் இருக்கும்போது இந்த முடிவை அவர் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. திமுக ஆட்சியில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. மறுபுறம் அதிமுக உட்பட எதிர்க்கட்சிகள் வலுவானதாக இல்லை. அவர்களும் நேர்மையான ஆட்சியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில்லை.

எனவே, சிறந்த மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்துள்ளனர். அதே எண்ணோட்டத்துடன் விஜய்யும் அரசியலுக்கு வருவதை அவரின் அறிவிப்பில் உணர முடிகிறது. அவர்தனது முடிவில் பின்வாங்கமாட்டார் என்று நம்புகிறேன். அவரது அறிவிப்பில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் உள்ளன. எனினும், கட்சியின் முழுமையான கொள்கைகளை தெரிவித்தால் மட்டுமே விஜய்யை ஆதரிப்பது குறித்து கூறமுடியும்.

எஸ்.முருகேசன் (சென்னை, ஆட்டோ ஓட்டுநர்) - ரசிகர்களின் விருப்பத்தின்படியே கட்சி தொடங்கியிருக்கிறார். ஆனால், தன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த விஜயகாந்த் மறைந்து ஒரு மாதமே ஆன நிலையில், விஜய் எடுத்த முடிவு சற்று அதிருப்தி அளிக்கிறது. இப்போது அனைவரும் வாழ்த்து சொல்வார்கள்.

ஆனால் காலம் கடந்து போகும் போதுதான் மனதில் இருப்பவை எல்லாம் வெளியில் வரும். அதேநேரம், கட்சியில் அவரைத் தவிர யாரையும் மக்களுக்குத் தெரியாது. பெரும் கட்சிகளுக்கு இடையே படிப்படியாக வளர்ச்சி இருக்கக் கூடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE