மேகேதாட்டு அணை கட்டுமான வரைவுக்கு ஒப்புதல்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், மேகேதாட்டு அணை கட்டுமான வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர, தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:

டெல்லியில் கடந்த 1-ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மேகேதாட்டு அணை கட்டுமான வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்துக்கு செய்யப்படும் துரோகமாகும். தமிழகத்துக்கு இதுவரை திறக்க வேண்டிய பாக்கியுள்ள 90 டிஎம்சி நீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்காத ஆணையம், கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்று மேகேதாட்டு அணை கட்டுமானத்துக்கான வரைவு அறிக்கைக்கு வாக்கெடுப்பு நடத்தி, மத்திய நீர் ஆணையத்துக்கு பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும் கூட்ட முடிவில், 2.5 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.

இதைக்கொண்டு தமிழகத்தின் குடிநீர் தேவையை எப்படி ஈடுசெய்ய முடியும். கருகும் பயிர்களை எவ்வாறு காப்பாற்ற முடியும். எனவே தமிழக அரசு நமக்குரிய தண்ணீரை கேட்டும், மேகேதாட்டு அணைக்கான வரைவு அறிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள கூடாது என்றும் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். மேலும் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி.கே.வாசன் கோரிக்கை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், “காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடக அரசு, தமிழகத்துக்கு ஜனவரி மாதம் வரை நிலுவையில் உள்ள 90 டிஎம்சி நீரை திறந்திருக்க வேண்டும். அதேபோல தமிழகத்துக்கு பிப்ரவரியில் 5.26 டிஎம்சி நீரை திறக்க காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்த நிலையில், காவிரியில் இருந்து 2.5 டிஎம்சி நீரை மட்டும் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம் வரை திறந்துவிட வேண்டிய தண்ணீரையே இன்னும் முழுமையாகத் திறக்காத நிலையில் 2.5 டிஎம்சி தண்ணீர் என்பது போதுமானதல்ல. இருப்பினும் இந்த 2.5 டிஎம்சி நீரையாவது உரிய காலத்தில் திறக்க கர்நாடக அரசை மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE