ஐகோர்ட் விதிக்கும் அபராத தொகையில் சட்டப் புத்தகங்கள் - மதுரை கலைஞர் நூலகத்தில் தனிப் பிரிவு!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: உயர் நீதிமன்றம் அபராதம் விதிக்கும் வழக்குகளில் பெறப்படும் தொகையில் கலைஞர் நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசியாவிலே பல்துறை புத்தகங்கள் நிறைந்த கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை மதுரை நத்தம் சாலையில் கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் காட்டிலும் பிரமாண்டமாகவும், புத்தகங்களும் அதிகமாக உள்ள இந்த நூலகம் மதுரையின் மற்றொரு அடையாளமாக திகழ்கிறது. இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், இந்த நூலகத்திற்கு வந்து சென்றுள்ளனர்.

ஆரம்பத்தில் கலைஞர் நூலகம் கட்டிடத்தையும், அதன் செயல்பாடுகளையும் சுற்றிப் பார்க்கும் கூட்டம் அதிகமாக வந்தது. தற்போது புத்தகங்கள், நாளிதழ்கள் வாசிக்கும் உண்மையான வாசகர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மட்டுமே நூலகத்திற்கு அன்றாடம் வந்து செல்கிறார்கள். புத்தகத்தை எடுத்து வாசிப்பது, ஒப்படைப்பது வரை கலைஞர் நூலகம், நவீன தகவல் தொழில்நுட்பங்களை கொண்டு டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, நூலகத்திற்கு படிக்க வரும் வாசகர்கள், மாணவர்கள், தமிழ் அறிஞர்களை கவர்ந்துள்ளது.

மதுரை கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில் சென்னை உயர் நீதிமன்றம் கிளைப் பிரிவு நூலகம்

இந்நிலையில், எந்த நூலகத்திலும் இல்லாத ஒரு புதுமையாக, மதுரை உயர் நீதிமன்றம் கிளையில் தீர்ப்பு வழங்கப்படும் அபராத வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையில் கலைஞர் நூலகத்திற்கு தேவையான சட்டப் புத்தங்கள் வாங்கி கொடுக்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காகவே, கலைஞர் நூலகத்தில் சென்னை உயர் நீதிமன்றம் கிளைப் பிரிவு நூலகம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நூலகப் பிரிவில் நீதிமன்றம் அபராத தொகையில் வாங்கப்படும் சட்டப் புத்தங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது ஒரளவு சட்டப் புத்தகங்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு வழக்கிலும் பெறப்படும் தொகையில் படிபடியாக புத்தகங்கள் புதிதாக வாங்கி வைக்கப்பட உள்ளது. இந்த புத்தகங்களை படிப்பதற்கு, சட்டக் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மட்டுமில்லாது வழக்கமாக கலைஞர் நூலகத்திற்கு வரும் அன்றாட வாசகர்களும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதுகுறித்து நூலகர்கள் கூறுகையில், ''உயர்நீதிமன்றம் கிளை நூலகப் பிரிவுக்கு மற்ற பிரிவுகளை போல் வரவேற்பு இல்லை. ஆனால், நாளடைவில் சட்டப் புத்தகங்கள், முக்கிய தீர்ப்பு சம்பந்தமான நூல்கள் வாங்கி வைக்கும்போது வழக்கறிஞர்கள், சட்டப் படிப்பு மாணவர்கள் அதிகளவு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்'' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE