விண்ணை முட்டும் அரிசி விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை தேவை: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழகத்தில் சாப்பாட்டுக்கான சன்னரக அரிசி விலை, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிலோவுக்கு ரூ. 6 வரை உயர்ந்திருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவில் நெல்லுக்கு கடுமையான தட்டுப் பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், அரிசி விலை கிலோவுக்கு மேலும் ரூ.12 வரை உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வணிகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆனால், விண்ணை முட்டும் அரிசி விலையை கட்டுப் படுத்துவதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் அரிசி விலை வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் அதிகரிக்கும். சம்பா / தாளடி அறுவடைப் பருவமான ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அரிசி விலை பெருமளவில் குறையும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக, இப்போது ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அரிசி விலை அதிகரித்து உள்ளது. 26 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையின் விலை ரூ.1450-லிருந்து ரூ1600 ஆகவும், 62 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையின் விலை 1350 ரூபாயிலிருந்து ரூ.1720 ஆக அதிகரித்து உள்ளது. இதனால் சில்லறை விற்பனையில் கிலோவுக்கு குறைந்த பட்சம் 6 ரூபாயிலிருந்து 8 ரூபாய் வரை அரிசி விலை அதிகரித்திருக்கிறது. இந்த விலை உயர்வு இன்னும் தொடரும் என்று தெரிகிறது.

மிக்ஜம் புயல் காலத்தில் பெய்த மழையால் காவிரி பாசன மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் நெற்பயிர்கள் சேதமடைந்தது, காவிரி பாசன மாவட்டங்களில் போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால் 2 லட்சம் ஏக்கரில் குறுவை நெற்பயிர்கள் முழுமையாகவும், ஒன்றரை லட்சம் ஏக்கரில் பகுதியாகவும் கருகியதால் விளைச்சல் குறைந்தது ஆகியவை தான் முதன்மைக் காரணங்களாக கூறப்படுகின்றன. தென்னிந்தியாவில் அதிக அளவில் நெல் விளையும் மாநிலங்களான ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் கூட போதிய அளவில் நெல் விளைச்சல் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால், அம்மாநிலங்களைச் சேர்ந்த வணிகர்கள் தமிழகத்துக்கு வந்து ஒரு குவிண்டால் சன்ன ரக நெல்லை ரூ.3,000 வரை விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.

இதுவும் அரிசி விலை உயர்வுக்கு காரணம். இவை தவிர அரிசி ஆலைகளுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது மூன்றாவது காரணமாக கூறப்படுகிறது. நெல் மூட்டைகளின் விலை கணிசமாக அதிகரித்து வருவதால், அடுத்த சில நாட்களில் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.12 வரை அதிகரிக்கக் கூடும் என்றும், ஒரு கிலோ பொன்னி, பாபட்லா ரக அரிசியின் விலை ரூ.75 என்ற உச்சத்தை அடையும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த வகை அரிசி கிலோ ரூ.48 முதல் ரூ.50க்கு தான் விற்கப்பட்டது. இவற்றின் விலை 50% வரை அதிகரித்து 75 ரூபாயை எட்டும் என்பது நியாயப்படுத்த முடியாததாகும். ஒருபுறம் அரிசி விலை உயர்ந்தால் இன்னொருபுறம் பருப்பு விலைகளும், பிற மளிகை சமான்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்திருக்கின்றன.

அதனால், தமிழக மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும் போது, அதைக் கட்டுப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. இதற்காகத் தான் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சரின் தலைமையில் விலைக் கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது. சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் அரிசி விலை அதிகரித்திருப்பது இந்தக் குழுவுக்கு தெரியுமா? என்பது கூட தெரியவில்லை. அரிசி விலையை கட்டுப் படுத்த தமிழ்நாடு அரசு இதுவரை தும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. மக்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லாததையே இது காட்டுகிறது.

அரிசி விலை உயர்வுக்கான காரணம் அதன் பற்றாக்குறை தான் என்பது தெளிவாகத் தெரியும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அரிசி அதிகமாக விளையும் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழக சந்தைக்கு அரிசியை கொண்டு வருவதன் மூலம் விலையை குறைக்கச் செய்வதற்கான சாத்தியக் கூறுகளை அரசு ஆராய வேண்டும். இந்தியாவின் எந்த மாநிலத்திலும் அரிசி விலை குறைவாக இல்லை என்றால், சன்னரக அரிசியை நியாய விலைக் கடைகள் மூலம் மானிய விலையில் விற்க அரசு முன்வர வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்