தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, சிவகங்கை உள்பட பல இடங்களில் என்ஐஏ சோதனை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தென்காசி என பல இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் இன்று (பிப்.2) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தமிழகத்தில் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இச்சோதனையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. அப்போது, திரிபுரா, அஸ்ஸாம், மேற்கு வங்கம், கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ஹரியானா, புதுச்சேரி, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய 10 மாநிலங்களில், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு பதுங்கி இருக்கும் நபர்களைத் தேடும் பணியில் என்ஐஏ ஈடுபட்டது. மாநில காவல்துறையின் ஒத்துழைப்புடன் இந்தச் சோதனையில் ஈடுபட்ட என்ஐஏ, சுமார் 50 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் தலைநகர் சென்னை தொடங்கி தென் மாவட்டங்களான மதுரை, திருச்சி, சிவகங்கை, தென்காசி உள்பட பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் ஆலாந்தூர், காளப்பட்டி ஆகிய பகுதிகளில் சோதனை நடைபெறுவதாகத் தெரிகிறது.

தென்காசி மாவட்டம் சிவகிரியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளும் ஒருவரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.

அதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பகைவரை வென்றான் கிராமத்தைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரதாப் (27). இவர் நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை மாவட்ட நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் இன்று அதிகாலை 5 மணி முதல் தேசிய புலனாய்வு முகாமை சோதனை நடத்தி வருகின்றனர். விஷ்ணு பிரதாப் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் சில கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது.

பரவலாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் வீடுகள், தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. இதற்கிடையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் என்பவரை நேரில் ஆஜராகும்படி வாட்ஸ் அப் மூலம் என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளதாகவும் அதற்கு தான் வெளியூரில் இருப்பதால் பிப்ரவரி 5 ஆம் தேதி ஆஜராவதாக கார்த்தி பதில் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE