லஞ்ச வழக்கில் வீட்டு வசதி வாரிய செயற் பொறியாளர் உள்ளிட்ட 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் பழனிசாமி, முன்னாள் அரசு வாகன ஓட்டுநரான இவர், தேவகோட்டை ராம்நகர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் தவணை முறையில் வீட்டுடன் கூடிய இடத்தை வாங்கினார்.

2018-ல் பழனிச்சாமி இறந்ததையடுத்து, வீட்டுவசதி வாரியத்துக்கான பாக்கித்தொகை முழுவதையும் ராமநாதபுரத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய கோட்ட அலுவலகத்தில் அவரது மகன் பிரவீன்குமார் செலுத்தினார். பின்னர், அந்தஇடத்தை தனது தாயார் பெயருக்கு மாற்றம் செய்யக் கோரி பிரவீன்குமார் மனு செய்தார்.

இது தொடர்பாக வீட்டு வசதி வாரிய செயற் பொறியாளர் பாண்டியராஜன், பதிவறை எழுத்தர் ரவிச்சந்திரன் ஆகியோரை பிரவீன்குமார் பலமுறை அணுகினார். அப்போது இடத்தின் அளவு தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, அந்த இடத்தை அளப்பதற்கான செலவு உட்பட ரூ.15 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுள்ளனர். பின்னர் ரூ.10 ஆயிரம் கொடுத்தால், வேலையை முடித்துத் தருவதாகக் கூறியுள்ளனர்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரவீன்குமார், இதுகுறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார். போலீஸாரின் ஆலோசனைப்படி நேற்று முன்தினம் இரவு ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் நோட்டுகளை செயற் பொறியாளரிடம் பிரவீன்குமார் கொடுக்கச் சென்றார். பணத்தை ஒப்பந்தப் பணியாளர் பாலாமணியிடம் கொடுக்குமாறு செயற் பொறியாளர் கூறியுள்ளார்.

இதையடுத்து, ரூ.10 ஆயிரத்தை பாலாமணியிடம் கொடுத்தபோது மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்பு போலீஸார், பாலாமணியை (65) கைது செய்தனர். மேலும், லஞ்சம்வாங்குமாறு கூறிய செயற் பொறியாளர் பாண்டியராஜன்(57), பதிவறை எழுத்தர் ரவிச்சந்திரன் (57)ஆகியோரையும் கைது செய்தனர்.தொடர்ந்து, மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE