கோவையை புறக்கணிக்கும் திமுக அரசு: அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

கோவை / பொள்ளாச்சி / திருப்பூர் / உதகை: கோவை மாவட்டத்தை திமுக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டினார்.

சென்னையில் பட்டியலின பெண்ணை தாக்கிய திமுக எம்எல்ஏவின் மகன், மருமகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காதது, வேங்கை வயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்களை இன்னும் கைது செய்யாதது, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கோவை மாவட்டத்தை திமுக அரசு தொடர்ந்து புறக்கணிப்பது ஆகியவற்றை கண்டித்து, அதிமுக சார்பில் கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, திருப்பூர், உதகை ஆகிய இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், தெற்கு தாலுகா அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவுமான அம்மன் கே.அர்ச்சுணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், சிங்கா நல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.ஆர்.ஜெயராம், கட்சியின் மாநில, மாவட்ட, பகுதி, வார்டு கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படம்: ஜெ.மனோகரன்.

கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏவுமான பி.ஆர்.ஜி. அருண்குமார் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக கொறடாவும், கோவை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் கந்தசாமி, தாமோதரன், சூலூர் கந்தசாமி, அதிமுக தோட்ட தொழிலாளர் பிரிவு அண்ணா தொழிற்சங்க மாநில தலைவர் அமீது, எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் தோப்பு க.அசோகன், பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ண குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களும் எழுப்பப் பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது: சென்னையில் பட்டியலின மாணவி மீது வன்கொடுமை செய்த நபரை கைது செய்திருப்பது வெறும் நாடகம். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மின் கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்களும், விசைத் தறி தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை திமுக அரசு திட்டமிட்டு செயல்படுத்தாமல் இருக்கிறது. நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் 40 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும். எப்போது சட்டப்பேரவை தேர்தல் வந்தாலும் 200 தொகுதிகளுக்கு மேல் அதிமுக வெற்றி பெற்று பழனிச்சாமி முதல்வர் ஆவார். இவ்வாறு அவர் கூறினார்.

படம்: இரா: கார்த்திகேயன்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் குமரன் சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெய ராமன் எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில் திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ விஜயகுமார், அமைப்பு செயலாளர் சிவசாமி, அம்மா பேரவை மாநில இணை செயலாளர் சு.குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி சுதந்திர திடல் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத் தலைமை வகித்தார். துணை செயலாளர் வி.கோபால கிருஷ்ணன் வரவேற்றார். மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுணன், கூடலூர் எம்எல்ஏ பொன்.ஜெயசீலன், முன்னாள் எம்எல்ஏ சாந்தி அ.ராமு, தலைமை கழக பேச்சாளர் அப்சரா ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE