தீபாவின் கணவர் மாதவன் கூறியததால்தான் அவரது வீட்டில் நுழைந்து வருமானவரி அதிகாரியாக நடித்தேன் என்று போலீஸாரிடம் சரணடைந்த இளைஞர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து மாதவனிடம் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை தொடங்கினார். தற்போது இவர் தி.நகர் சிவஞானம் தெருவில் கணவர் மாதவனுடன் வசித்து வருகிறார். பேரவையின் அலுவலகமும் அங்கேயே செயல்பட்டு வருகிறது.
கடந்த சனிக்கிழமை அதிகாலை தீபா வீட்டுக்கு வந்த மர்ம இளைஞர், அங்கிருந்த மாதவனிடம் தன்னை வருமானவரி புலனாய்வு அதிகாரி என்று கூறி அடையாள அட்டை, சோதனை நடத்துவதற்கான கடிதம் ஆகியவற்றை காட்டினார். அவரது அடையாள அட்டையில் மித்தேஷ் குமார் என்ற பெயர் இருந்தது. அப்போது தீபா வீட்டில் இல்லை. தீபா வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடப்பதாக தகவல் தெரிந்ததும் பத்திரிகையாளர்கள் அங்கு திரண்டனர். தீபாவின் வழக்கறிஞர்களும் வந்தனர்.
தப்பி ஓட்டம்
இதனால் பதற்றமடைந்த அந்த இளைஞர், திடீரென சுவர் ஏறிக் குதித்து தப்பி ஓடிவிட்டார். போலீஸ் விசாரணையில் அவர் போலி அதிகாரி என தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாம்பலம் காவல் நிலையத்தில் மாதவன் புகார் கொடுத்தார். தப்பி ஓடிய இளைஞரைப் பிடிக்க தி.நகர் உதவி ஆணையர் செல்வம் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். தீபாவின் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது அனைத்து கேமராக்களும் ஒருவாரமாக வீட்டின் சுவரை நோக்கி திருப்பி வைத்திருந்தது தெரியவந்தது. இதனால், அந்த இளைஞரின் உருவம் அதில் பதிவாகவில்லை. வேண்டுமென்றே யாரோ கேமராக்களைத் திருப்பி வைத்திருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர்.
சரண் அடைந்த போலி அதிகாரி
இந்நிலையில், வருமான வரித் துறை அதிகாரியாக நடித்த நபர், நேற்று முன்தினம் நள்ளிரவு மாம்பலம் காவல் நிலையத்தில் போலீஸார் முன்னிலையில் சரண் அடைந்தார். அந்த இளைஞரின் பெயர் பிரபாகரன் (31). எம்பிஏ முடித்துள்ளார். புதுக்கோட்டை அருகே உள்ள கோச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர் தற்போது குடும்பத்தினருடன் விழுப்புரத்தில் வசித்து வருகிறார். திருமணம் ஆகவில்லை. புதுச்சேரியில் கணேஷ் மெஸ் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
அவரை போலீஸார் தனி இடத்தில் வைத்து விடிய விடிய தீவிர விசாரணை நடத்தினர். தீபாவின் கணவர் மாதவன்தான் தன்னை வருமான வரி அதிகாரியாக நடிக்கச் சொன்னார் என அவர் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
போலீஸாரிடம் வீடியோ ஒன்றை பிரபாகரன் ஒப்படைத்தார். சுமார் ஏழரை நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் பிரபாகரன் பேச்சு அடங்கி உள்ளது. அதில், அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாதவன் எனது ஹோட்டலுக்கு வந்திருந்தார். அவரை நன்கு உபசரித்தோம். அப்போது அவர் என்னிடம், ‘‘நீங்கள் ஆள் வாட்டசாட்டமாக இருக்கிறீர்களே? சினிமாவில் நடிக்க விரும்புகிறீர்களா?’’ என்று கேட்டார். அதுபோன்ற ஆசை எதுவும் இல்லை என்று தெரிவித்தேன். ‘‘சினிமாவில் நடிக்க விரும்பினால் என்னிடம் கூறுங்கள். வாய்ப்பு வாங்கித் தருகிறேன். அடுத்த முறை வரும்போது நல்ல போட்டோ ஒன்றை கொடுங்கள்’’ என்று கூறிவிட்டு சென்றார்.
இரண்டு மாதம் கழித்து மீண்டும் மாதவன் எனது ஹோட்டலுக்கு வந்திருந்தார். என்னிடம் இருந்த போட்டோவை அவரிடம் கொடுத்தேன். அதன்பிறகு அடிக்கடி போனில் பேசினார். எப்போது, பேசினாலும் வாட்ஸ்அப் காலிலேயே அழைப்பார். வேறு வேறு எண்ணில் இருந்து அழைப்பார். 10, 15 நாட்களுக்கு முன்பு என்னை போனில் அழைத்தார். ‘உனக்கு விரைவு தபால் ஒன்றில் வருமானவரித் துறை புலனாய்வு அதிகாரிபோல் அடையாள அட்டை ஒன்றை அனுப்பி வைக்கிறேன். நீ வருமானவரி அதிகாரிபோல் நடிக்க வேண்டியது இருக்கும்’ என்று தெரிவித்தார். அவர் சொன்னபடியே கூரியர் தபாலில் அடையாள அட்டை ஒன்றை அனுப்பி வைத்தார்.
கடந்த வாரம் மீண்டும் எனக்கு போன் செய்த மாதவன், ‘சென்னைக்கு வர ஏதேனும் வேலை இருக்கிறதா?’ என்று கேட்டார். 10-ம் தேதி சென்னையில் பிறந்தநாள் விழா ஒன்றில் கலந்துகொள்ள வர உள்ளேன் என்று தெரிவித்தேன். ‘அப்படியென்றால் 10-ம் தேதி காலை 7 மணிக்கு என் வீட்டுக்கு வா’ என்று அவரின் தி.நகர் வீட்டு முகவரியை தெரிவித்தார்.
அதன்படி, 10-ம் தேதி காலை அவரது வீட்டுக்குச் சென்றேன். வெளியில் இருந்தபடியே அவருக்கு போன் செய்தேன். ‘வெளியில் இருக்கும் காவலாளிகளிடம் வருமான வரி புலனாய்வு அதிகாரி என கூறிவிட்டு உள்ளே வா’ என்றார். அவர் என்ன சொன்னாரோ அப்படியே செய்தேன். ஏதோ பட வாய்ப்புக்காக இப்படி நடிக்கச் சொல்கிறாரோ? என நினைத்தேன்.
தீபாவிடம் போனில் மிரட்டல்
நான் உள்ளே சென்றபோது வெளியே ஒரு கார் சென்றது. நான் தீபா காராக இருக்கும் என நினைத்தேன். வீட்டுக்குள் சென்று மாதவனிடம் பேசினேன். உண்மையிலேயே ஷுட்டிங்கிற்குதான் வரச் சொன்னீர்களா? என கேட்டேன். ‘கண்டிப்பாக ஷுட்டிங்கிற்காகத்தான் வரச் சொன்னேன். உங்களை எந்த அளவுக்கு நம்ப வேண்டும் என்று ரிகர்சல் நடந்து கொண்டிருக்கிறது’ என்றார். வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்வதற்கான சர்ச் வாரன்டை என்னிடம் கொடுத்தார். ஏன் சார் இதை என்னிடம் கொடுக்கிறீர்கள். அதில், உங்கள் பெயர், முகவரி இருக்கிறதே? என்று தெரிவித்தேன். அப்போது அவர் தீபாவுக்கு போன் செய்து, நம் வீட்டுக்கு வருமானவரித் துறை அதிகாரிகள் வந்துள்ளனர் என்று தெரிவித்தார். பின்னர் போனை என்னிடம் கொடுத்து தீபாவை மிரட்டச் சொன்னார். அவர் சொன்னபடியே, ‘உங்களிடம் பேச வேண்டும். 15 நிமிடத்தில் நீங்கள் இங்கே வர வேண்டும்’ என மிரட்டினேன்.
சுமார் 2 மணி நேரம் என்னிடம் நன்றாக பேசிக் கொண்டிருந்தார். வீட்டில் இருந்த போட்டோக்களை காட்டினார். திடீரென வழக்கறிஞர் ஒருவர் வந்தார். அவரிடம் பதற்றப்படாமல் பேசுங்கள் என்றார். நானும் வழக்கறிஞரிடம் வாரன்டை காட்டி பேசினேன். அப்போது பத்திரிகையாளர்கள் வந்ததால் பதற்றம் ஏற்பட்டது. ‘என்ன சார் பத்திரிகையார்கள் வந்து விட்டார்களே?’ என்றேன். ‘சுவர் பக்கத்தில் சேர் போட்டிருக்கிறேன். சரியான நேரம் பார்த்து தப்பித்து ஓடி விடு’ என்று கூறினார்.
‘ஏன் சார் என்னை வரவழைத்தீர்கள். மீடியாவில் போட்டோ வந்தால் என்ன செய்வது?’ என்றேன். ‘அதெல்லாம் ஒன்றும் இல்லை. அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்றார். மாதவன் சொன்னபடி சுவர் ஏறிக் குதித்து தப்பி ஓடினேன். ஆட்டோவில் ஏறி நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் சென்றேன். அங்கிருந்து நங்கநல்லூர் சென்று உறவினர் வீட்டு பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டுவிட்டு ஊர் திரும்பினேன். மாதவன் கொடுத்த போலி ஆவணங்கள், அடையாள அட்டையை கிழித்து எரிந்தேன். அவர் என்னை அழைத்த போன் அழைப்புகளையும் அழித்துவிட்டேன்.
மனைவியிடம் பணம் பறிப்பதற்காக மாதவன் என்னை தவறாக பயன்படுத்தினார் என்று சந்தேகம் எழுந்தது. டிவியில் என்னைப் பற்றிய செய்தி ஓடியதைப் பார்த்து மனம் உடைந்தேன். வீட்டில் உள்ளவர்களிடம் நடந்த விஷயத்தை சொன்னபோது, போலீஸில் சரண் அடைந்து உண்மையை சொல்லிவிடுங்கள் என்றனர். அதன்படியே சரண் அடைந்தேன்.
இவ்வாறு அந்த வீடியோவில் பிரபாகரன் பேசியுள்ளார்.
மாதவனிடம் விசாரணை?
போலி அதிகாரியாக நடித்த இளைஞர் தீபாவை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் வந்திருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. அவரது பின்னணியில் வேறு யாரும் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில், போலீஸில் சரண் அடைந்த இளைஞர் பிரபாகரன், மாதவன் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளைக் கூறியிருப்பது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
சரணடைந்த பிரபாகரன் மீது ஆள் மாறாட்டம் உட்பட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு அவரை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பிரபாகரன் தெரிவித்துள்ள தகவல்களின் அடிப்படையில் மாதவன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
எதற்காக இந்த நாடகம் நடத்தப்பட்டது, மாதவனும், பிரபாகரனும் இணைந்து தீபாவை மிரட்டி பெரிய அளவில் பணம் பறிக்க திட்டமிட்டார்களா? வருமானவரி சோதனை என்ற பெயரில் தீபாவின் வீட்டில் இருந்து சொத்து ஆவணங்கள் எதையும் கைப்பற்ற திட்டமிடப்பட்டதா? என பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மாதவனிடம் கருத்து கேட்க அவரது செல்போனில் தொடர்பு கொண்டபோது, பெண் ஒருவர் போனை எடுத்து, ‘‘மாதவன் யாரிடமும் பேச மாட்டார். அனைத்து விவரங்களையும் பத்திரிகையாளர் சந்திப்பில் விரைவில் தெரிவிப்பார்’’ என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். தீபாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
தீபாவுக்கும் மாதவனுக்கும் இடையே நீண்ட நாட்களாகவே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக தீபாவின் வீட்டில் இருந்து வெளியேறிய மாதவன் தற்போதுதான் வீட்டுக்கு திரும்பி உள்ளார். இந்நிலையில், தீபாவுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கையில் ஈடுபட மாதவன் திட்டமிட்டு காய் நகர்த்தியதன் விளைவே போலி அதிகாரி நாடகமாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதன்மூலம் தீபா - மாதவன் விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago