திமுக ஒதுக்கும் ‘சீட்’, மம்தாவின் ‘தவறு’, நிதிஷால் பாஜகவுக்கு பலவீனம்... - கே.எஸ்.அழகிரி நேர்காணல்

By நிவேதா தனிமொழி

மக்களவைத் தேர்தல் 2024 களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பான அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலளித்துள்ளார்.

இந்தமுறை மக்களவைத் தேர்தலில் திமுகவிடம் காங்கிரஸ் எத்தனை தொகுதிகள் கேட்டுள்ளது?

“பேச்சுவார்த்தை என்பது எங்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் தான். அது குறித்து வெளிப்படையாக பேச முடியாது.”

ஆனால், காங்கிரஸுக்கு 6 இடங்கள் மட்டுமே திமுக ஒதுக்க திட்டமிட்டிருப்பதாகப் பரவலாக தகவல் வெளியானதே?

சிரிப்புடன்... “பரவலாக 6 தொகுதிகள் ஒதுக்குவதாக உங்களுக்கு தகவல் கிடைக்கிறது. ஆனால், எங்கள் கட்சி அலுவலகத்தில் திமுக, காங்கிரஸுக்கு ‘25 சீட்’ ஒதுக்குவார்கள் எனப் பரவலாக சொல்கிறார்கள் . இதில் எது சரி, எது தவறு என்று தெரியவில்லை.”

அதிமுக - பாஜக கூட்டணி தனித்து தேர்தலில் களம் காணவிருப்பதால் வாக்கு சிதற வாய்ப்பு இருக்கிறதா?

“வாக்கு வங்கி இருக்கும் இரு கட்சிகள் பிரிந்தால் மட்டும்தான் வாக்கு சிதறும். ஆனால், இங்கு அதிமுகவிடம் மட்டும்தான் வாக்கு இருக்கிறது. பாஜகவிடம் அவர்கள் கட்சி உறுப்பினர்கள் வாக்கு மட்டும்தான்.”

தமிழகத்தில் பாஜக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?

“கண்ணற்றவர்கள் ஐந்து பேர் ஒரு யானையைப் பரிசோதித்த கதையாக தான் பாஜக அமைக்கும் கூட்டணி இருக்கும்.”

மக்கள் நீதி மய்யம், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இணைய வாய்ப்பிருக்கிறதா?

"கமல்ஹாசன், ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இருவருக்கும் நெருக்கமானவர். எனவே, கமல் வருகைப் பற்றி மூவரும் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டும். அதில் நான் பதில் சொல்வதற்கு எதுவுமில்லை”.

தமிழகத்தில் கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை விமர்சிப்பது உங்கள் கருத்து?

“அவர் தொடர்ந்து அவ்வாறு பேசுவது தவறு”.

காங்கிரஸ் தமிழக தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நீடிக்கிறதா?

"பொதுவாக காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவர்கள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருக்க முடியும். நான் இந்தப் பொறுப்புக்கு வந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக நீடித்து வருகிறேன். இதனால் புது தலைவர்கள் நியமிக்கப்படுவார்களா என்னும் கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது.

‘ஆசை வெட்கம் அறியாதது’ என சொல்வார்கள். அப்படி தலைவராகும் ஆசை உள்ளவர்கள் டெல்லிக்குச் சென்று தலைமை சந்தித்து ’எனக்கு வாய்ப்பு கொடுங்கள், நான் திறமையாக செயல்படுகிறேன்’ எனக் கேட்க வேண்டும். அப்படி எதையும் செய்யாமல் சிலர் பேசிக்கொண்டு மட்டுமே இருக்கிறார்கள். அதில் எந்தப் பயனுமில்லை. இன்னொரு தலைவர் நியமிக்கப்பட்டால், அவர்களுக்கு உறுதுணையாக நான் செயல்படுவேன். இதில் தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும்.”

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர் - அரசு இடையே மோதல் போக்கு முற்றுகிறது. ஆளுநர் பதவியை நீக்குவது மட்டும்தான் ஒரே தீர்வா? உங்கள் கருத்து என்ன?

"காங்கிரஸுக்கு ’ஆளுநர் இருக்கக் கூடாது’ என்பது கொள்கை கிடையாது. மாநிலத்துக்கு ஆளுநர் என்பவர் நிச்சயமாக வேண்டும். இந்தியா ஒரு கூட்டாட்சி தத்துவத்தைப் பின்பற்றும் நாடு. அதனால்தான் அனைவருக்கும் அதிகாரம் வரையறுக்கப்பட்டு இருக்கிறது. அதை மீறினால் ஆளுநர் ஆர்.என்,ரவியைப் போல் அசிங்கப்படுவார்கள்”.

இண்டியா கூட்டணியை விட்டு மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால், நிதிஷ் குமார் விலகியிருக்கிறார்கள். இதனால், இண்டியா கூட்டணிக்குப் பாதிப்பா?

“மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், நிதிஷ் குமார் ஆகியோர் வெளியேறியது இண்டியா கூட்டணிக்கான முடிவல்ல. இவர்கள் மீண்டும் எங்களோடு இணைய மாட்டார்கள் என்று நான் சொல்லவில்லை. மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் கூட்டணிக்குள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நிதிஷ் குமார் ஒரு நல்ல தலைவர். நல்லவர்களுக்கு ஆசைகள் இருக்கக் கூடாது என்பதல்ல. ‘அவருக்கு பிரதமராக வேண்டும்’ என்பதுதான் ஆசை. அவருக்கு அந்த எண்ணம் இருப்பதில் தவறில்லை. அதற்கு அவர் தகுதியானவர்தான். ஆனால், அதைக் கூட்டணி கட்சிகளும் ஏற்கவேண்டும். அவருடைய துரதிஷ்டவசத்தால் யாரும் அவரை பிரதமர் வேட்பாளராக முன்மொழியவில்லை. அவர் ஒரு பக்கம் சோசியலிசம் பேசுவார். மறுபக்கம், அத்வானி உடன் நெருக்கமாக இருப்பார். இதனால், நிதிஷ் குமாரைப் பாஜக பயன்படுத்திக் கொண்டது.

நிதிஷ் குமாருடன் பாஜக இணைந்ததால் பாஜகவுக்குத் தான் பலவீனம். விரைவில் நிதிஷ் குமார் பாஜக விட்டு வெளியேற வாய்ப்பிருக்கிறது. பாஜக கட்சிக்கு கொள்கை கிடையாது. அவர்களை எதிர்த்தவர்களே திரும்பி வந்தாலும் சேர்த்துக் கொள்வார்கள். ’சாக்கடையில் விழுந்த பிறகு, இந்த சாக்கடை எங்கிருந்து வந்தது என்பதை பற்றி எல்லாம் ஆராயாமல் அதிலே தங்கிடுவோம்’ என பாஜக முடிவு செய்துவிட்டது.”

காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் பெரிய மனதுடன் செயல்படாததால் தான் கூட்டணியிலிருந்து விலகியதாக ‘காங்கிரஸ்’ மீது குற்றச்சாட்டை வைப்பது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

“தேர்தல் கூட்டணியில் இரு கட்சிகளும் ஆதாயம் இருக்க வேண்டும். அதற்கு பெயர்தான் கூட்டணி. ’ஒரு கட்சிக்குத்தான் ஆதாயம், மற்றொரு கட்சிக்கு இல்லை’ என்றால் இதற்கு கூட்டணி அவசியமில்லை. இந்தியா முழுவதிலும் இருப்பது கட்சி காங்கிரஸ்தான். ஆனால், ’அவர்கள் கேட்கும் தொகுதிகளை நாங்கள் கொடுக்க முடியாது’ என மேற்கு வங்கத்தில் மம்தா சொல்கிறார். இதை காங்கிரஸின் அடிமட்ட தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் கட்சிக் குழுவிடம் ’உங்கள் கருத்து என்ன வேண்டும்?’ என மம்தா கேட்டிருக்க வேண்டும். அதுதான் நியாயமும் கூட. ஆனால், வெளிப்படையாக ’இரண்டு தொகுதிகள் மட்டுமே கொடுப்பேன்’ என மம்தா கூறியதற்குப் பின் பேச்சுவார்த்தை எதற்காக நடத்த வேண்டும் என அடிமட்ட நிர்வாகிகள் கேட்கிறார்கள். அவர்கள் கேட்பது நியாயமானது தானே.

இடதுசாரிகள் கொள்கை ரீதியிலான எங்களுடன் கூட்டணியில் இருக்கிறார்கள். அந்த ஊரில் சீதாராம் யெச்சூரியை விட்டுவிட்டு தேர்தலை நாங்கள் சந்திக்க மாட்டோம். மம்தா பானர்ஜிக்கு யெச்சூரியைப் பிடிக்காது. அதற்காக இடதுசாரிகளை எங்களால் தியாகம் செய்ய முடியாது. இடதுசாரி கட்சியிகள் எடுத்த முடிவில் உறுதியாக நிற்பார்கள். ஆனால், மம்தா போன்றவர்கள் சந்தர்ப்பவாதிகள். எனவே, மம்தா பானர்ஜி பேசியது தவறு. அதை உணர்ந்து மம்தா மீண்டும் வந்தால் ஏற்றுக் கொள்வோம்.”

பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலை சந்திப்பது இண்டியா கூட்டணிக்குப் பலமா? பலவீனமா? உங்கள் பார்வை என்ன?

"காங்கிரஸ் கட்சி ஒரு ஜனநாயக கட்சி. எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், அவர்கள் சில விதிகளுக்கு கட்டுப்பட்டாக வேண்டும். எப்போதும் காங்கிரஸ் பாராளுமன்றம் குழு கூடி தான் பிரதமரை தேர்வு செய்வோம். அதுதான் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகிய தலைவர்களுக்குப் பின்பற்றப்பட்டது. கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மீதான நம்பிக்கை, அன்பின் காரணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ’ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர்’ என அறிவித்தார். அது எங்களுக்கு மகிழ்ச்சி தான். அப்போதும் கூட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதை அறிவிக்கவில்லை.”

இண்டியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் எழுமா?

"மன்மோகன் சிங் தலைமையில் 10 ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. அனைத்து கட்சி அமைச்சர்களும் தொடர்ந்து எங்களுடன் இணைந்து பயணித்தார்கள். எனவே, கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது காங்கிரஸுக்கு கைதேர்ந்த கலை. எனவே, அதை சிறப்பாக செய்வோம்.”

பிராந்திய கட்சிகள் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க நினைக்கிறார்களா?

"காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணி அமைக்க முடியாது என்பதை ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார். இந்தியா முழுவதும் கூட்டணி அமைக்கக் கூடிய பலம் பொருந்திய ஒரே கட்சி காங்கிரஸ். இதை ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்ட மாநில கட்சிகள் புரிந்து கொண்டு ஆதரிக்கிறார்கள். எனவே, காங்கிரஸ் மீதி நம்பிக்கை உள்ளவர்கள் கூட்டணியில் நீடிக்கிறார்கள்.”

மக்களவைத் தேர்தலைச் சந்திக்க இண்டியா கூட்டணி எப்படி தயாராகி வருகிறது?

"எங்கள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரிலிருந்து மக்களவைத் தேர்தலுக்கு தயாராகிவிட்டார். அகில இந்திய அளவில் மக்களைக் கவரும் வகையில் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. மாநில அளவில் கட்சிப் பணிகளைத் தீவிரமாக செய்து வருகிறோம். விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த 26-ம் தேதி வெல்லும் ஜனநாயக மாநாட்டை நடத்தியது. வரும் பிப்ரவரி 13-ம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே சென்னையில் பிரச்சாரம் தொடங்கவிருக்கிறார். இப்படியாக தேர்தலுக்கு இண்டியா கூட்டணி ஆயத்தமாகி வருகிறது."

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE