மூணாறில் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பை சேதப்படுத்திய காட்டு யானை

By என்.கணேஷ்ராஜ்

மூணாறு: மூணாறில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு அருகே ஞாயிறு இரவு வந்த யானை அங்குள்ள வாழைத்தோட்டங்களையும், குடியிருப்புகளையும் சேதப்படுத்தியது. இதனால் தொழிலாளர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் மூணாறில் தேயிலை தோட்டங்கள் அதிகம் உள்ளன. இப்பகுதியிலே எஸ்டேட் நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு காலனிகளை அமைத்து தந்துள்ளது. தேயிலை தோட்டங்களுக்கு அருகிலேயே வனப்பகுதி அமைந்துள்ளதால் யானை, காட்டுமாடு, காட்டுப்பன்றி, புலி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து விடுகின்றன. குறிப்பாக ஒற்றை காட்டுயானை அடிக்கடி இப்பகுதியில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு சுற்றுலா பகுதியான எக்கோ பாய்ண்ட் பகுதிக்கு இந்த யானை வந்ததால் கடைக்காரர்கள் கடைகளை தார்பாயினால் மூடிவிட்டு பாதுகாப்பான பகுதிக்குச் சென்று விட்டனர். இருப்பினும் அங்கு விற்க வைக்கப்பட்டிருந்த அன்னாசிபழம், மக்காச்சோளம், பப்பாளி போன்ற பழங்களின் வாசனைக்கு கவரப்பட்டு துதிக்கையை நுழைத்து பழங்களை சாப்பிட்டது. பின்பு வனத்துறையினர் இந்த யானையை விரட்டினர்.

இந்நிலையில் ஞாயிறு இரவு குண்டுமலை அப்பர் டிவிஷன் பகுதிக்கு வந்த இந்த யானை தொழிலாளர்கள் குடியிருப்புகளின் தகர கொட்டகைகளை அடித்து கீழே தள்ளியது. அருகில் உள்ள தோட்டத்தில் வாழைகளை உண்ண நுழைந்ததால் வாழைமரங்கள் பெருமளவில் சேதமடைந்தன. தொழிலாளர்களின் வீட்டுக்கு அருகே விளைவிக்கப்படும் முட்டைக்கோஸ், கேரட் மற்றும் தோட்டப்பயிர்களை உண்ணும் நோக்கில் யானைகள் சமீபகாலமாக அதிகளவில் வரத் தொடங்கி உள்ளன.

இதனால் குடியிருப்புகள் சேதமாவதுடன், உயிருக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. ஆகவே தொழிலாளர்கள் பலரும் தங்கள் வீடுகளுக்கு அருகில் பயிரிட்டு வந்த காய்கறி விவசாயத்தை கைவிடத் தொடங்கி உள்ளனர்.தொழிலாளர்கள் கூறுகையில், வனத்துறையினர் யானையை விரட்டுவதுடன் பணியை முடித்துக் கொள்கின்றனர். மின்வேலி, அகழி போன்ற முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். யானை நடமாட்டத்தை கண்காணித்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE