கோவை: தனியார் நிறுவனத்தின் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி, அந்நிறுவனத்தின் செயலியில் உறுப்பினர்களாக உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோவை அருகே திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால், உறுப்பினர் ஆகலாம், யூடியூப்பில் வீடியோ அனுப்பி வைக்கப்படும். அந்த வீடியோவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தால், முதலீடு செய்த பணத்தின் அடிப்படையில் தொகை தொடர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் அதற்காக செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் சில தகவல்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் அந்நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அச்செயலியை பதிவிறக்கம் செய்து விவரங்களை பதிவு செய்தனர். பணமும் செலுத்தினார்கள்.
இந்நிலையில், இந்நிறுவனம் எந்த ஒரு வருவாயும் இல்லாமல் பணத்தை பெற்று, அதில் முதலீடு செய்தவர்களுக்கு அதிகப்படியான லாபத்தொகையை எப்படி கொடுக்க முடியும், இது மோசடி என கோவை மாநகர குற்றப்பிரிவு காவல்துறையிடம் சிலர் புகார் அளித்தனர். அதன் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிந்தனர். இந்நிறுவனத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணம் செலுத்தி இருப்பதாக கூறப்படுகின்றன. இந்நிலையில் அவர்கள், நிறுவனத்தின் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய காவல்துறையினரிடம் வலியுத்துவதற்காக இன்று (ஜன.29) காலையில் வாகனங்கள் மூலம்10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நீலாம்பூர் அருகேயுள்ள தனியார் கல்லூரி அருகே குவிந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவை மாநகர துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில் காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சத்யநாதன் மற்றும் அங்கு திரண்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கலைந்து சென்றனர் : அப்போது, அங்கு குவிந்திருந்த உறுப்பினர்கள், இந்நிறுவனம் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என காவல்துறையினரிடம் வலியுறுத்தினர். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒரே பகுதியில் திரண்டதால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் நெரிசலில் சிக்கின.
» தருமபுரி | சாலை வசதி கோரி மலை கிராம மக்கள் மறியல் - தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
இதற்கிடையே, தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த உறுப்பினர்கள் கூறும்போது,‘‘நாங்கள் பணம் செலுத்தி உள்ள நிறுவனத்தில் தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களை சேர்ந்த 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். எங்களுக்கு அனுப்பப்படும் வீடியோவில் கேள்விகள் கேட்கப்படும். அதற்கு நாங்கள் அளிக்கும் பதிலை பொறுத்தும், நாங்கள் முதலீடு செய்த பணத்தை பொறுத்தும் ஒரு வீடியோவுக்கு ரூ.5 முதல் ரூ.1,800 வரை பணம் கிடைக்கும். கடந்த ஒரு வருடமாக எங்களுக்கு பணம் கிடைத்து வருகிறது. இதுவரை யாரிடமும் மோசடி செய்யவில்லை. சிலர் தவறான புகார் அளித்துள்ளனர். அதன் பேரில்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடும்’’ என்றனர்.
தொடர்ந்து விசாரணை : இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது,‘‘கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனத்தில் அடிப்படை உறுப்பினராக ரூ.360, சில்வர் உறுப்பினருக்கு ரூ.3,060, கோல்டு உறுப்பினருக்கு ரூ.60 அயிரத்து 660, கிரவுண் உறுப்பினருக்கு ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 260 செலுத்த வேண்டும். அவர்கள் செலுத்தும் தொகைக்கு ஏற்ப தொகையும், சிறப்பு பரிசு தொகையும் அளிக்கப்படும். இதில் உறுப்பினர்களாகும் நபர்களுக்கு வீடியோ அனுப்பப்பட்டு அதில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது அவர்கள் ஏற்கெனவே செலுத்திய தொகையின் அடிப்படையில் பணமும், சில வீட்டு உபயோக பொருட்களும் வழங்கப்படுகிறது. ஆனால், அந்த தொகை எதில் இருந்து வழங்கப்படும் என்றும், சில மாத்திரைகள் கொடுக்கப்படுவதால், அவை மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் உறுதிசெய்யப்படவில்லை. இது தொடர்பாக தொடர்ந்து விசாரிக்கப்படுகிறது,’’ என்றனர்.
.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago