தருமபுரி | சாலை வசதி கோரி மலை கிராம மக்கள் மறியல் - தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

By எஸ்.செந்தில்

அரூர்: பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வனப்பகுதியில் சாலை வசதி கோரி மலைக் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மலைப்பகுதியில் அமைந்துள்ளது சித்தேரி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட கலசபாடி பகுதியில் அரசநத்தம், ஆலமரத்து வலசு, கருக்கம்பட்டி, தரிசுகாடு, கோட்டக்காடு, பொய்க்குண்டல வலசு உள்ளிட்ட 9 கிராமங்கள் அமைந்துள்ளன. சுமார் 4500 மக்கள் தொகை கொண்ட இப்பகுதியில் இதுவரை சாலை வசதி இல்லை. இங்குள்ள மக்கள் தங்களது மருத்துவம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மலைப்பகுதியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரம் காட்டுவழியாக கீழிறங்கி வாச்சாத்தி கிராமத்தில் இருந்து செல்ல வேண்டியுள்ளது. மழைக் காலங்களில் இப்பாதைகளில் இரண்டு இடங்களில் காட்டறுகள் ஓடுவதால் போக்குவரத்து அப்போது முற்றிலும் பாதிக்கப்படும் நிலை நிலவி வருகின்றது.

தங்களுக்கு சாலை வசதி வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். கடந்த முறை தேர்தல் புறக்கணிப்பு போராட்டமும் நடத்தினர். அப்போது அரசு சார்பில் விரைவில் சாலை அமைத்து தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் சாலை அமைப்பு பணிகள் நடக்கவில்லை. இதனிடையே சாலை வசதிக்கோரி கலசப்பாடி உள்ளிட்ட மலைக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பள்ளி மாணவ, மாணவியர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் அரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கோபிநாதம்பட்டி கூட்டுரோடு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காலை 11.15 மணிக்கு தொடங்கிய சாலை மறியலால் சேலம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனிடையே மறியல் குறித்து தகவலறிந்து வந்த, எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், கோட்டாட்சியர் வில்சன் ராசசேகர் டிஎஸ்பி ஜெகன்நாதன், வட்டாட்சியர் வள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரவளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, ஊராட்சிமன்றத் தலைவர் கோவிந்தம்மாள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுனர். இருப்பினும் பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் ஈடுபட்டனர்.

இதனிடையே பிற்பகல் 3 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து பேருந்துகளில் ஏற்ற போலீசார் முயற்சித்தனர். அதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மீண்டும் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் பிற்பகல் 3.15 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது. இதனால் அரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் காத்திருந்தன. மறியல் முடிவுற்ற நிலையில் அதன்பின்னர் போக்குவரத்தை போலீசார் சீரமைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்