சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் வருகை - பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீஸார்

By க.ரமேஷ்

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சாமி தரிசனம் செய்தார்.

புதுச்சேரியில் இருந்து இன்று(ஜன.29) காலை சுமார் 9 மணிக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், குடும்பத்தினருடன் தனி ஹெலிகாப்டரில் சிதம்பரம் அண்ணாமலைநகர் அண்ணாமலை பல்கலைக்கழக ஹெலிகாப்டர் இறங்க தளத்திற்கு வந்தார். தமிழக அரசின் சார்பில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் டாக்டர். அ.அருண் தம்புராஜூம் வரவேற்றார்.

சிதம்பரத்துக்கு வருகை தந்த குடியரசு துணைத்தலைவர்ஜெகதீப் தன்கரை, தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பூங்கொத்து அளித்து வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து ஜக்தீப் தன்கர் கார் மூலம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்றார். நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். குடியரசு துணைத்தலைவர் கோயில் வாயிலிருந்து கோயிலில் உள்ள 21 படி வரை பேட்டரி வாகனத்தில் சென்றார். அவருடன் அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்களும் சென்றனர். பின்னர் கோயில் கனக சபை மீது ஏறி அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பரங்கிப்பேட்டையில் உள்ள பாபாஜி கோயிலுக்குச் சென்றும் சாமி தரிசனம் செய்தனர். குடியரசு துணைத் தலைவரின் வருகையையொட்டி சிதம்பரம் மற்றும் பரங்கிப்பேட்டை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை 7 மணி முதல் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

மேலும், முக்கிய சாலை பகுதியில் பொதுமக்களை போலீஸார் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலக பணிக்கு செல்வோர் கடும் அவதியடைந்தனர். போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது. புவனகிரி எல்லையம்மன் கோயிலுக்கு ஜக்தீப் தன்கர் செல்வதாக இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பின்னர் அவர் மதியம் 12 மணியளவில் ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரி புறப்பட்டுச் சென்றார். வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE