தமிழகத்தில் இணைநோய் பாதிப்புள்ள 1.35 கோடி பேருக்கு கண், கால், சிறுநீரக பரிசோதனை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இணைநோய் பாதிப்புள்ள 1.35 கோடி பேருக்கு கண், கால், சிறுநீரக பரிசோதனை செய்யப்பட உள்ளது என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.

தமிழக சுகாதாரத் துறையின் ‘மக்களைத்தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சாமணப்பள்ளியில் 2021-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தில், உயர் ரத்தஅழுத்தம் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, இல்லங்களுக்கு சென்று மருத்துவசேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் மூலம் 67.30 லட்சம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம், 36.50 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய், உயர்த்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயாளிகள் 31.30 லட்சம் பேர் உட்பட 1.35 கோடி இணை நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் டயாலிசிஸ், பிசியோதெரபி சிகிச்சை, மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

ஓராண்டுக்கு மேல் தொடர்ந்து சிகிச்சைபெறும் இணை நோயாளிகளுக்கு முதல்கட்டமாக, கண் பாதிப்பு, கால்களில் புண்,சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளதாலும், நீண்டகால பாதிப்பாக மாறும் என்பதாலும், முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்க பொது சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மூலமாக 1.35 கோடி இணை நோயாளிகள் பயன்பெற்று வருகின்றனர். பொதுவாக இணை நோயாளிகளுக்கு, வேறு சில நோய் பாதிப்புகளும் ஏற்படும்.

அந்த வகையில், முதல்கட்டமாக ஏற்படக்கூடிய கண் பாதிப்பு, கால் புண், சிறுநீரகப்பாதிப்புக்கு பரிசோதனை செய்யத் திட்டமிட்டுள்ளோம். அவ்வாறு பரிசோதிக்கப்படும்போது, கண்டறியப்படும் பாதிப்புகளைத் தொடர்ந்து, இணை நோயாளிகள் அனைவருக்கும் மருத்துவ முகாம் அமைத்து, பரிசோதனைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டப் பரிசோதனை விரைவில் தொடங்கப்படும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE