மதுரை மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் பல ஆயிரம் ஏக்கர் நெல் வயல்கள் கருகி வரும் நிலையில், சாதுர்யமாக செயல்பட்ட பெண் விவசாயி முழு விளைச்சல் கண்டு சாதித்துள்ளார்.
பெரியாறு பாசன பகுதியில் 45,000 ஏக்கர் இருபோக நிலங்கள் பேரணை முதல் கள்ளந்திரி வரை உள்ளது. போதிய அளவு தண்ணீர் வழங்கப்படாததால் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் கருகும் நிலையில் உள்ளது. சில ஆயிரம் ஏக்கரில் பாதி வளர்ந்த நிலையில் கருகிய பயிரை கால்நடைகள் மேய்ந்து வருகின்றன.
இந்நிலையில் பல இடங்களில் உள்ள தனது அனைத்து வயல்களிலும் முழுமையாக நெல் விளைச்சல் கண்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார் பெண் விவசாயி ஒருவர்.
குலமங்கலத்தைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி(65). விவசாயியான இவர் வயது முதிர்ந்த நிலையில், ஊன்று கோல் உதவியுடன் தனது வயல்களை இவரே மேற்பார்வை செய்கிறார். கூலி ஆட்களை வைத்து விவசாயம் மேற்கொள்கிறார்.
குலமங்கலத்தில் ஆங்காங்கே பல இடங்களில் இவருக்கு வயல் உள்ளது. இந்த வயல்கள் அனைத்திலும் நெற்பயிர் கதிர்விட்டு ஒரு வாரத்தில் அறுவடை செய்யும் நிலையை எட்டியுள்ளது. மதுரை வேளாண் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் பாக்கியலட்சுமியின் வயலை பார்த்தனர். இவர்கள் பரிந்துரைத்த நுண்ணுயிரியான சூடோமோனாஸ் என்ற இயற்கை உரத்தை பாக்கியலட்சுமி பயன்படுத்தியுள்ளார். இது சுற்றுச்சூழலுக்கு பேருதவியாக இருப்பதுடன் குலை நோய், இலைப்புள்ளி நோய் ஆகியவை கட்டுப்பட்டுள்ளதையும் அதிகாரிகள் அறிந்தனர்.
மேலும் நெற் கதிரில் நெல் மணிகளும் அதிகமாக விளைந்துள்ளதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தினர். நாங்கள் அளித்த வழிகாட்டுதல்களை முழுமையாக செயல்படுத்தியதால் பாக்கியலட்சுமி, இவரது உறவினர் ராமசுப்பிரமணி ஆகியோர் விவசாயத்தில் வெற்றி கண்டுள்ளனர் என்றனர் செல்விரமேஷ், மணோன்மணி, உஷாராணி, மணிகண்டன் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள்.
சுற்றியுள்ள பல வயல்கள் விளைச்சலின்றி கருகி வரும் நிலையில், தனது வயல்களை முழுமையாக விளைவித்தது குறித்து பாக்கியலட்சுமி கூறியதாவது: 2017-ம் ஆண்டு நவ.1-ல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. மழை, அணையில் தண்ணீர் அளவு, அணையை திறக்கும் தேதி குறித்து அதிகாரிகள் ஆலோசனை என அனைத்து விஷயங்களையும் நாளிதழ்கள் மூலம் முழுமையாக அறிந்து கொள்வேன். வயலை தயார் நிலையில் வைத்திருப்போம்.
அணையில் தண்ணீர் மட்டம் உயர்வதை கணக்கிட்டு, கிணற்று தண்ணீரை பயன்படுத்தி நாற்று பாவிவிடுவோம். கணிப்பில் சிறு தவறு நடந்தாலும் சிக்கல்தான். இதை சரியாக கணிக்க முடிந்ததால் இந்தாண்டு தண்ணீர் திறப்பிற்கு 12 நாட்கள் முன்பாக 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ம் தேதியே எனது வயலில் நாற்று நடப்பட்டுவிட்டது.
வேளாண் அதிகாரிகள் அதிகம் பரிந்துரைத்த ஜெஜெஎல் என்ற வகை நெல் விதைகளை பயன்படுத்தினேன். 120 நாள் பயிர் இது. நாற்று நடப்பட்டபோது பாய்ச்சிய தண்ணீர் வற்றுவதற்கு முன்பாகவே அணை தண்ணீர் வந்து சேர்ந்தது. இதனால் நெற்கதிர் வேகமாக வளர்ந்தது. மற்றவர்களுக்கு மேலும் ஒரு தண்ணீர் தேவைப்பட்டது. ஆனால் 12 நாட்களுக்கு முன்பே நாற்று நட்டதால், எனது வயல்கள் அனைத்திற்கும் அணை நீரே போதுமானதாகிவிட்டது.
தற்போது கதிர் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. எனது கிணற்று நீரே தேவைப்படவில்லை. கிணற்று தண்ணீரை மற்ற வயல்களுக்கு பாய்ச்சுவதன் மூலமும் வருமானம் கிடைக்கிறது.
மேலும் அறுவடையிலும் முந்திக்கொள்வதால், ஒரு ஏக்கர் வைக்கோல் ரூ.8,000 வரை விலை போகிறது. முழு வீச்சில் அறுவடை நடக்கும்போது ரூ.2,000 மட்டுமே கிடைக்கும். வேளாண் அதிகாரிகள் அளிக்கும் ஆலோசனைகளையும் சரியாக பயன்படுத்திக்கொள்வேன். இவ்வாறு ஒவ்வொரு விஷயத்திலும் திட்டமிட்டு செயல்படுவதால் விவசாயத்தை மன திருப்தியோடும், லாபம் பார்க்கும் வகையிலும் செய்ய முடிகிறது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
6 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago