‘வன்மம் கலந்த நோக்கம்’ - காந்தி குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

By செய்திப்பிரிவு

நாடு சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியும், அவரது இந்திய தேசிய ராணுவமும், அதன் புரட்சியும்தான் முக்கிய காரணம் என்று கடந்த 23-ம் தேதி அவரது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி இருந்தார். காந்தியடிகளை சிறுமைப்படுத்துகிற வகையில் காழ்ப்புணர்ச்சியோடு ஆளுநர் பேசியதாக பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். காந்தியை அவமதிக்கவில்லை என அதற்கு ஆளுநர் விளக்கம் தந்திருந்தார்.

இந்த சூழலில் காந்தி குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்து வன்மை கலந்த நோக்கத்துடன் இருப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள. வரும் 30-ம் தேதி காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அன்றைய தினம் மதநல்லிணக்க உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.

“என் மதத்தின் மீது சூளுரைத்தே சொல்கிறேன். என் மதத்திற்காக நான் உயிர் துறக்கவும் தயார். ஆனால் அது என்னுடைய சொந்த விவகாரம். அதில் அரசுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்று நிமிர்ந்து சொன்னவர் மகாத்மா காந்தியடிகள். தன்னை இந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டவர். அதே நேரத்தில் தன்னைப் போலவே அனைத்து மதத்தவர் உணர்வுக்கும் மரியாதை கொடுத்தவர் அவர். அனைத்து மதங்களும் ஒரே நோக்கம் கொண்டவை என்றவர் அவர்.

ஒற்றை மதவாத தேசியவாதத்தை அவர் ஏற்கவில்லை. அதனாலேயே மதவெறிக்கு அவர் பலியானார். 75 ஆண்டுகள் ஆன பிறகும் அண்ணல் காந்தியார் மீதான கோபம், வகுப்புவாதிகளுக்கு குறையவில்லை. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் காந்தியாரை வலதுசாரி சக்திகள் இழிவுபடுத்துவது தொடர்கதை

‘காந்தியால் இந்த நாட்டுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை’ என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லி இருப்பதும் இதே வன்மம் கலந்த நோக்கத்துடன்தான்.

தேசத்தந்தை என்று போற்றப்படும் காந்தியடிகளை, பொய்களாலும் அவதூறுகளாலும் கொச்சைப்படுத்தும் காலமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவரது கொள்கைகள் மட்டுமல்ல, அவரே இழிவுபடுத்தப்படுகிறார். இது நிகழ்காலம் எவ்வளவு வகுப்புவாதச் சகதியில் சிக்கி இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். இதனை உடனே தடுத்தாக வேண்டும்.

மதநல்லிணக்கத்தின் அடையாளமான அண்ணல் காந்தியடிகள் அவர்கள் மதவெறியர்களால் கொல்லப்பட்ட ஜனவரி 30-ம் நாளை, நாடு முழுவதும் மதநல்லிணக்க நாளாகக் கடைப்பிடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகள் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழகத்துக்கு இந்தக் கடமை அதிகம் இருக்கிறது. எனவே, ஜனவரி 30-ம் நாளன்று மதநல்லிணக்க உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியா முழுமைக்குமான ஒற்றுமையின் அடையாளமாக இருக்கின்ற அண்ணல் காந்தியின் புகழைச் சிதைப்பதன் மூலமாக இந்திய நாட்டின் பன்முகத் தன்மையை சிதைக்க முயற்சிக்கிறார்கள். அண்ணல் காந்தி அடிகளின் பிறந்தநாளை ‘சுவச்ச பாரத் அபியான்’ என மாற்றியதில் இருக்கிறது இவர்களது அழித்தல் வேலைகள். இது காந்தியின் அனைத்து அடையாளங்களையும் அழித்தல் ஆகும். அதே போன்ற காரியத்தைத்தான் அக்டோபர் 2-ம் நாள் ஊர்வலம் நடத்துவதன் மூலமாக ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு திசைதிருப்ப பார்த்தது. அதனைத் தமிழக அரசு அனுமதிக்கவில்லை. எத்தகைய திரைமறைவு வேலைகள் பார்த்தாலும், மக்களின் மனதில் குடியிருக்கிறார் அண்ணல் காந்தி.

நாடு சந்தித்து வரும் மதவெறி பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும், நாட்டு மக்கள் அனைவரும் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் வகையிலும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை ஜனவரி 30 அன்று மாவட்டக் கழகங்கள் (திமுக-வினர்) நடத்திட வேண்டும். இதில் அனைத்து மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்திய நாட்டின் பண்பாட்டையும், ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற தமிழகத்தின் மாண்பையும் இந்திய ஒன்றியத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக திட்டமிட்டு நடத்திட வேண்டும்.

மதவெறியை மாய்ப்போம், மனித நேயம் காப்போம்! வாழ்க அண்ணல் காந்தியின் புகழ்!” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்