தமிழகத்தில் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த பட்டியல் இன்னும் தயாராகவில்லை: காங்கிரஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த பட்டியலை காங்கிரஸ் இன்னும் தயாரிக்கவில்லை என்றும் இது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகி இருக்கும் பட்டியல் ஆதாரமற்றது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக தலைமையகத்தில் இன்று நடைபெறும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது 14 தொகுதிகளைக் கேட்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. மக்களவைத் தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. பேச்சுவார்த்தையில் பங்கேற்க, கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் கலந்துகொண்டனர். திமுக சார்பில், அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் மூத்த அமைச்சர்கள் பலர் இந்த பேச்சுவார்த்தையில் இடம்பெற்றிருந்தனர்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 9 தொகுதிகள் உள்பட 14 தொகுதிகளைக் கேட்டு 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக பேச்சுவார்த்தைக் குழுவினரிடம் கொடுக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2024 மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதுபோல, எந்த பட்டியலும் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்படவும் இல்லை, கொடுக்கப்படவும் இல்லை. இது முற்றிலும் தவறான செய்தி என மறுக்க விரும்புகிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. | முழுமையாக வாசிக்க > தமிழகத்தில் 14 தொகுதிகளைக் கேட்க காங்கிரஸ் திட்டம்: திமுகவுடன் இன்று முதற்கட்ட பேச்சுவார்த்தை

இதனிடையே, இன்று நடைபெறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது முதற்கட்ட பேச்சுவார்த்தை மட்டுமே. இதில், தொகுதிகள் இடங்கள் என்று எதுவும் இறுதி செய்யப்படாது, என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE