காமராஜர் வழியில் கல்வியை வளர்த்தது அதிமுக ஆட்சி: நாடார் மகாஜன சங்க மாநாட்டில் இபிஎஸ் பெருமிதம்

By செய்திப்பிரிவு

மதுரை: முன்னாள் முதல்வர் காமராஜர் வழியில் ஆட்சியை நடத்தி, தமிழகத்தை கல்வியில் அபார வளர்ச்சிபெறச் செய்தது அதிமுக என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.

அகில இந்திய நாடார் மகாஜன சங்கத்தின் 2 நாள் மாநில மாநாடு, மதுரை அருகேயுள்ள நாகமலை புதுக்கோட்டையில் நேற்று தொடங்கியது. மாநாட்டுக்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை வகித்தார்.

மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி பேசியதாவது: காமராஜர் பற்றி பேச அதிமுகவுக்குத்தான் அதிக உரிமை உள்ளது. பெருந்தலைவர் என்ற பட்டம் காமராஜருக்கு மட்டுமே பொருந்தும். ஆனால், ஊராட்சி ஒன்றியத் தலைவரை பெருந்தலைவர் என்று அழைக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது. ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் என்பதை, குழுத் தலைவர் என மாற்றியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

மெர்க்கன்டைல் வங்கியை கபளீகரம் செய்ய சிலர் முயன்றனர். ஜெயலலிதா அவ்வங்கியை மீட்டெடுக்கப் பேருதவியாக இருந்தார். சிவந்தி ஆதித்தனுக்கு மணிமண்டபம் அமைத்து, நான் திறந்துவைத்தேன். வணிகம் செய்யும் சமூகத்தினருக்குப் பாதுகாப்பு அளித்தது அதிமுக ஆட்சிதான். ஆனால், இன்று வணிகர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கின்றனர்.

காமராஜர் மதிய உணவுத் திட்டம் என்ற விதையை நட்டார். அதை மரமாக்கி எம்ஜிஆர் சத்துணவுத் திட்டமாக மேம்படுத்தினார். ஜெயலலிதா சீருடை, புத்தகம், கணினிஉள்ளிட்டவை வழங்கி, ஏழை மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

நான் முதல்வராக இருந்தபோது ஏராளமான கல்லூரிகள் தொடங்கப்பட்டன. உயர் கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகம் முன்னேறியது அதிமுக ஆட்சியில்தான். காமராஜர் வழியில் செயல்பட்டு, இந்த சாதனையைப் படைத்தோம். வரும் மக்களவைத் தேர்தலில் இந்த சமூகத்தைச் சேர்ந்தவேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். அவரை வெற்றி பெறச் செய்வது உங்கள் கடமை. இவ்வாறு பழனிசாமி பேசினார்.

மாநாட்டில், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜன் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இன்று நடைபெறும் மாநாட்டு நிறைவு விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி, திமுக அமைச்சர்கள் மற்றும் பல்வேறு சமூகத் தலைவர்கள் பங்கேற்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE