தனியார் பீர் தொழிற்சாலையை மூடும்படி மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை

By செய்திப்பிரிவு

சென்னை: தனியார் பீர் தொழிற்சாலையை மூடுமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கம் மற்றும் அரண்வாயல் பகுதிகளில் யுனைடெட் பிரிவரிஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பீர் தொழிற்சாலை உள்ளது. கடந்த ஜன.24-ம் தேதி அங்கு ஆய்வு நடத்திய மாசு கட்டுப் பாட்டு வாரியம், பல்வேறு விதிகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி ஆலையை மூட உத்தரவிட்டது. மேலும், ஆலைக்கான மின் இணைப்பை துண்டிக்கவும் மின் வாரியத்துக்கு உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தில் முறையீடு: இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பீர் தொழிற்சாலை நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச் சாரி ஆஜராகி, ‘‘ஆலைக்கான அனுமதி கடந்த ஆண்டு நவம்பருடன் முடிவடைய இருந்த நிலையில், அதை புதுப்பிக்க 6 மாதங்களுக்கு முன்பே விண்ணப்பிக்கப்பட்டது. 4 மாதங்களாக அந்த விண்ணப் பத்தை பரிசீலிக்காமல் எவ்வித காரணமும் இல்லாமல் அதை திருப்பி அனுப்பிவிட்டனர். இந்நிலையில், ஜன.20-ம் தேதி ஆலையைப் பார்வையிட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஆலையை மூட ஜன.24-ம் தேதி உத்தரவிட்டுள்ளனர்.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள தால் ஆலையில் உள்ள அமோனியா மற்றும் கார்பன் - டை - ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் கசியாமல் பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுட்டிக்காட்டியுள்ள குறைபாடு களை சரி செய்ய ஆலை நிர் வாகம் தயாராக இருக்கிறது’’ என வாதிட்டார். அதற்கு மாசு கட்டுப் பாட்டு வாரியம் சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

3 வாரம் இடைக்கால தடை: அதையடுத்து நீதிபதிகள், ‘‘அந்த ஆலையால் நூற்றுக் கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்றுவருகின்றனர். ஆலை நீண்டநாட் களாக செயல்பட்டு வரும் நிலையில் திடீரென மூடப்பட்டால் அது ஆலை நிர்வாகத்துக்கு மட்டுமின்றி, அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும். எனவே, ஆலையை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு 3 வாரங் களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மின் இணைப்பையும் உடனடியாக வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE