பெருங்குடியில் மழைநீர் வடிகால் பணியின்போது ராட்சத குழாய் உடைந்து பெருக்கெடுத்த குடிநீர்

By செய்திப்பிரிவு

சென்னை: பெருங்குடி பகுதியில் மழைநீர் வடிகால் பணி நடந்த போது, ராட்சத குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் பீறிட்டு வெளியேறிய நீரால் குடியிருப்பு பகுதி சேதமடைந்ததுடன், அப்பகுதியில் இருந்த மின் மாற்றியும் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், 184-வது வார்டு பகுதியில் சென்னை குடிநீர் வாரியத்தின் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இந்நிலையில், வீர பாண்டிய கட்டபொம்மன் தெருவில் நேற்று முன்தினம் மாலைமாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்போது 800 மி.மீ விட்டம் கொண்ட ராட்சத குடிநீர் குழாய் உடைந்து, அந்தக் குழாயில் இருந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் பீறிட்டு வெளியேறியது.

இதனால் அருகில் இருந்த குடியிருப்பின் சுற்றுச் சுவர் சாய்ந்தது. அங்கிருந்த மின் மாற்றியிலும் தண்ணீ்ர பட்டு வெடி சத்தம்ஏற்பட்டு, குடியிருப்பு மீது மின்மாற்றி சாய்ந்தது. சாலைகளில்குடிநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடி குடியிருப்புகளுக்குள் புகுந்தது.இதனால் அங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. தகவல் அறிந்து விரைந்து வந்த குடி நீர் வாரிய பணியாளர்கள் நீர் வெளியேறுவதை தடுத்தனர்.

நீர் பீறிட்டு வெளியேறியதால், சாலை மற்றும் குடியிருப்பை ஒட்டிய பகுதியில் ராட்த பள்ளம் ஏற்பட்டது. அதனால் அந்த சாலையில் போக்கு வரத்து தடை செய்யப்பட்டது. இந்நிலையில் உடைந்த ராட்சத குழாயை சீரமைக்கும் பணியில் சென்னை குடிநீர் வாரிய பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்று காலைக்குள் குழாய் சீரமைக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE