நாகர்கோவிலில் இன்று முதல் 20 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரை நடைபெறும் ரயில்வே இருவழிப் பாதை பணியைத் தொடர்ந்து ஒழுகினசேரி மேம்பாலத்தை அகலப்படுத்தும் வகையில் புதிய மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் இன்று ( 28-ம் தேதி ) முதல் 20 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் வரும் வாகனங்கள் அனைத்தும், ஒழுகினசேரி அப்டா மார்க்கெட்டில் இருந்து புத்தேரி வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்குவழிச் சாலை வழியாக வடசேரி அசம்பு சாலைக்கு வந்து, நாகர்கோவில் செல்ல வேண்டும். நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் அனைத்தும், வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி வழியாக புத்தேரி நான்குவழிச் சாலை வழியாக, ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் சென்று, அங்கிருந்து திருநெல்வேலிக்கு செல்ல வேண்டும்.

திருநெல்வேலி - தக்கலை இடையே இரு மார்க்கத்திலும் செல்லும் வாகனங்கள் அனைத்தும், ஒழுகினசேரி அப்டா சந்தையில் இருந்து புத்தேரி, இறச்சகுளம், களியங்காடு வழியாக அமைக்கப்பட்டுள்ள நான்குவழிச் சாலையில் செல்ல வேண்டும். இந்த போக்கு வரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு, நாகர்கோவில் போக்குவரத்து போலீஸார் வலியுறுத்தியுள்ளனர்.

பணிகள் வேகம் பெறுமா?: நாகர்கோவில் மாநகரின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள ஒழுகினசேரி பாலம், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை நாகர்கோவிலுடன் இணைக்கும் முக்கிய பாலம் ஆகும். இந்தப் பாலத்தில் பணிகள் நடைபெறுவதால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, வாகனங்கள் அனைத்தும் சுமார் 10 கி.மீ. வரை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அத்துடன், போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ள வடசேரி, புத்தேரி பகுதிகளில் உள்ள சாலைகள் மிகவும் அகலம் குறைந்தவை. கனரக வாகனங்கள் போக்குவரத்துக்கு உகந்த சாலைகள் இவை அல்ல. எனவே,புதிய பாலம் பணிகளை விரைந்து முடித்து, ஒழுகினசேரி பாலத்தை விரைவில் பயன் பாட்டுக்கு திறக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE