சென்னை: நாள்தோறும் செய்தித் தாள்களில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்த செய்திகளே அலங்கரித்த வண்ணம் உள்ளன. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் செய்த முதல் வேலை சட்டம்-ஒழுங்கை பிணவறைக்கு அனுப்பியதுதான் என்றும் தனக்குத் தானே கண்டனம் தெரிவித்து தப்பிக்க நினைக்கும் பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “விடியா திமுக அரசு பொறுப்பேற்ற நாள்முதலே தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும், பெருகி வரும் போதைப் பொருள் புழக்கம் குறித்தும் அறிக்கைகள் வாயிலாகவும், ஊடகப் பேட்டிகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் தொடர்ச்சியாகத் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வந்தும், இதுவரை விடியா அரசின் காவல் துறை எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
நாள்தோறும் செய்தித் தாள்களில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்த செய்திகளே அலங்கரித்த வண்ணம் உள்ளன. "தினசரி நாளிதழ்களைப் படியுங்கள்" என்று ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் இந்த விடியா அரசின் பொம்மை முதலமைச்சர், தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தவிர்த்து எந்த நாளிதழையும் படிப்பதாகத் தெரியவில்லை. படித்திருந்தால், தனது அலங்கோல விடியா ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சவக் குழியில் இருப்பதை நிச்சயம் உணர்ந்திருப்பார்.
அந்த வகையில், இந்த வாரம் நிகழ்ந்த சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளில் முக்கியமான சிலவற்றை நான் சுட்டிக்காட்ட விழைகிறேன். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகில் உள்ள கல்லுக்குழி கிராமத்தில் முதியோர், பெண், 15 வயது சிறுமி, 12 வயது சிறுவன் என்றுகூடப் பாராமல், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்களுடைய வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
» “அதிமுகவின் இரு பெரும் தலைவர்களின் கோட்டை சேலம்” - எடப்பாடி பழனிசாமி பேச்சு
» கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் சாட்சியப் பதிவு தாக்கல் @ சென்னை உயர் நீதிமன்றம்
சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே, சாணாரப்பட்டி பகுதியில் தனியாக இருந்த பெண் கொடூரமாகக் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு 10 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் செய்தியாளர், மர்ம நபர்கள் தன்னை தாக்குவதற்கான அச்சமான சூழ்நிலை இருப்பதாக, தொடர்ச்சியாக காவல் துறையிடம் முறையிட்டும், தாக்குதலுக்கு 4 மணி நேரங்களுக்கு முன்பே தெரிவித்து பாதுகாப்பு கேட்டும், காவல் துறை மெத்தனப் போக்கோடு இருந்ததன் விளைவாக கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே முதியவர் கை துண்டாக வெட்டிப் படுகொலை. ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் மூதாட்டி ஒருவர் மீது கொடூரமான முறையில் தலையில் கல்லைப் போட்டுப் படுகொலை செய்யப்பட்டு, அவரது நகை கொள்ளையடிக்கப்பட்டது.
இதுமட்டுமன்றி பிற மாநிலங்களைச் சேர்ந்த கொள்ளையர்களின் ஊடுருவலும், குற்றச் செயல்களும் தமிழகத்தில் அதிகரித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இதுபோன்ற தொடர் நிகழ்வுகளால் தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைக்கு பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகின்ற ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகள், பெண்கள், முதியோர், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்கள் என யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவி வருகிறது.
இதுபோன்ற குற்றச் செயல்கள் அதிகரிக்க, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கமும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப் பொருள் புழக்கம் குறித்து நான் தொடர்ச்சியாக எச்சரித்துக்கொண்டே இருக்கிறேன் என்பதனாலே போதைப் பொருள் புழக்கத்தைத் தடுப்பதற்கு "ஆபரேஷன் கஞ்சா" ஆரம்பித்ததாகச் சொன்ன தமிழகக் காவல் துறை DGP, 2.ஒ. 3.ஓ, 4.ஓ என "ஓ" மட்டுமே போட்டாரே தவிர, போதைப் பொருள் புழக்கம் குறைந்ததாகத் தெரியவில்லை.
எனது தலைமையிலான கழக ஆட்சி இருந்தபோது, குற்றச் செயல்களில் ஈடுபட நினைக்கவே அச்சப்படும் வண்ணம், அம்மாவின் வழியில் சட்டம்-ஒழுங்கை சிறப்புறக் காத்து வந்த தமிழகக் காவல் துறை, இந்த விடியா திமுக ஆட்சியில், சமூக விரோதிகள் எந்தவித அச்சமோ, தயக்கமோ, சட்ட நடவடிக்கை மீதான பயமோ இன்றி குற்றச் செயல்களில் ஈடுபட, பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினைப் போலவே கும்பகர்ண தூக்கத்தில் இருப்பது வருத்தத்திற்கும். கடும் கண்டனத்திற்கும் உரியது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், "சட்டம்-ஒழுங்கு என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும்.. மறுபடியும் சொல்கிறேன்.. யாராக இருந்தாலும்" என்று கேமராவுக்கு முன் சினிமா வசனம் போல் பேசிய ஸ்டாலின், ஆட்சிக்கு வந்ததும் செய்த முதல் வேலை சட்டம்-ஒழுங்கை பிணவறைக்கு அனுப்பியதுதான். பத்திரிகையாளர் ஒருவர், காவல் துறையின் அலட்சியப் போக்கு காரணமாக மர்ம நபர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதனை ஒரு "சிறப்பு நிகழ்வாக" கருதி நிதி அளிப்பதாக, வினோதமான ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின்.
தமிழக அரசியல் வரலாற்றில் இப்படியொரு விந்தையான, கேலிக்கூத்தான அறிக்கையை யாரும் வெளியிட்டதில்லை. அப்படிப்பட்ட அறிக்கையை வெளியிட்டுள்ள ஸ்டாலின், தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறையின் அலட்சியப் போக்கையும், தன்னுடைய நிர்வாகத் திறமையின்மையையும் ஒப்புக்கொள்ள மனமில்லாமல் தப்பித்துக்கொள்ள தனக்குத்தானே கண்டனம் வேறு தெரிவித்துக்கொள்கிறார்.
அவருக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, "ஸ்டாலின் அவர்களே, அது கண்ணாடி!"
இதே கண்ணாடியைப் பார்த்துதான் தன்னைத்தானே நம்பர் 1 முதலமைச்சர் என்று சொல்லிக்கொள்கிறார் ஸ்டாலின். அவரது இந்தக் கூற்றை இந்நூற்றாண்டின் ஆகச்சிறந்த நகைச்சுவையாகவே நான் கருதுகிறேன். அவர் எதில் எல்லாம் நம்பர் 1 என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்த விழைகிறேன்.
இதுமட்டுமல்லாமல், எதிர்வரும் தேர்தல்களில் அதிகமாக தோல்வியுற்ற தொகுதிகள் பட்டியலிலும் நம்பர் 1 இடத்தைதான் பிடிக்கப்போகிறார்.இனியும் இந்த பொம்மை முதலமைச்சரை நம்பி "எந்தப் பயனும் இல்லை" என்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. அதனால், தமிழகக் காவல் துறை அதிகாரிகளிடம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவைகளை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்துகிறேன்.
சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் வண்ணம் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தாமதமின்றி உடனடியாகக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; 24 மணி நேரமும் காவல்துறை ரோந்துகளை மேற்கொள்ள வேண்டும். பெண்களுக்கான சிறப்பு "அம்மா பேட்ரோல்" (Amma Patrol) வாகனங்களை அதிகரித்து, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்; உதவி நாடி காவல் துறையை அணுகும் மக்களிடம், கவனத்துடன் அவர்களது பிரச்சனைகளைக் கேட்டறிந்து, எந்தவித தாமதமும் இன்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் தொடரும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளைத் தடுக்கும் பொருட்டு, மேற்கூறிய நடவடிக்கைகளை செயல்படுத்தி, இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழா வண்ணம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, தமிழக மக்களைக் காக்கும். உன்னதப் பணியினை மேற்கொள்ளுமாறு தமிழகக் காவல்துறை அதிகாரிகளை மீண்டும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago