ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து: அமைச்சர்கள், அதிமுக, பாஜக நிர்வாகிகள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில், தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள், அதிமுக, பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

குடியரசு தினத்தையொட்டி, ஆளுநர் மாளிகையில் நேற்று மாலை தேநீர் விருந்துநடந்தது. முதல்வர், அமைச்சர்கள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆளுநர் மீதான அதிருப்தியால், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக மற்றும்கம்யூனிஸ்ட் கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டன.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் விசிக சார்பில் நடைபெறும் மாநாட்டுக்கு சென்ற நிலையில், நேற்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோரும், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, டிஜிபிசங்கர் ஜிவால் ஆகியோரும் பங்கேற்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. பாலகங்கா, பாமக சார்பில் ஜி.கே.மணி, பாஜக சார்பில் தேசிய மகளிர்அணி தலைவர் வானதி சீனிவாசன், கரு.நாகராஜன் மற்றும் ஆற்காடு இளவரசர் உள்ளிட்ட பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

விருந்தின் போது, சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விருதுகளை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி அமைப்பு, திருவண்ணாமலை ஜி.மதன்மோகன், சென்னை எம்.குபேந்திரன், தேனி என்.ரஞ்சித்குமார் ஆகியோருக்கு சமூக சேவை விருதும், மதுரை பசுமை அமைதிக்காதலன் அமைப்பு, தருமபுரி ஜி.தாமோதரன்,திருநெல்வேலி சி.முத்துகிருஷ்ணன், விருதுநகர் வி.தலைமலைக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதும் வழங்கப்பட்டது.

குடியரசு தின விழாவில், பள்ளி, கல்லூரி மாணவிகளின் கிராமிய நடனம் நடைபெற்றது. இதில், கல்லூரிகள் பிரிவில் ராணி மேரி, ஸ்டெல்லா மேரிஸ், சோகோ இகேதா ஆகியகல்லூரிகளுக்கு முதல் 3 பரிசுகளையும், பள்ளிகள் பிரிவில் சூளைமேடு ஜெய்கோபால் கரோடியா, பெரம்பூர் லூர்து, அண்ணா நகர் வள்ளியம்மாள் பள்ளிகளுக்கு முதல் 3 பரிசுகளையும் ஆளுநர் வழங்கினார்.

அலங்கார வாகனங்களில் முதல் பரிசு தீயணைப்பு துறைக்கும், 2-வது பரிசு காவல் மற்றும் சுகாதாரத் துறைக்கும், 3-வது பரிசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைவாகனங்களுக்கும் வழங்கப்பட்டது. இதற்கானகேடயங்களை துறை செயலர்கள் அமுதா, ககன்தீப்சிங் பேடி, அதுல்ய மிஸ்ரா பெற்றனர்.

அதிக அளவில் கொடிநாள் நிதி வசூலித்த திருவள்ளூர், சென்னை, திருச்சி மாவட்டங்களுக்கான சுழற்கோப்பையை மாவட்ட ஆட்சியர்கள் டி.பிரபுசங்கர், ரஷ்மி சித்தார்த் ஜகடே,மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி பெற்றனர். கோவை ஆணையர் சிவகுரு பிரபாகரனுக்கு மாநகராட்சிக்கான கோப்பை வழங்கப்பட்டது. கொடிநாள் நிதியில் பங்களிப்பு சதவீதஅளவில் முதல் 3 இடம் பிடித்த கடலூர், செங்கல்பட்டு, பெரம்பலூர் மாவட்டங்களுக்கான கோப்பைகளை, ஆட்சியர்கள் அருண்தம்புராஜ், ராகுல்நாத், சார் ஆட்சியர் கோகுல், மாநகராட்சிகளில் முதலிடம் பிடித்த ஈரோடு மாநகராட்சி ஆணையர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், ஆளுநரின்செயலர் கிர்லோஷ் குமார், பொதுத்துறைசெயலர் நந்தகுமார் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE