காந்தி, அண்ணா பதக்கம், விருதுகளை வழங்கினார் முதல்வர்: மதுரை பூரணம் அம்மாளுக்கு சிறப்பு விருது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், காந்தியடிகள் காவல் பதக்கம் மற்றும் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மதுரை பூரணம் அம்மாளுக்கு முதல்வரின் சிறப்பு விருதை வழங்கி கவுரவித்தார்.

நாட்டின் 75-வது குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா காமராஜர் சாலையில், உழைப்பாளர் சிலை அருகே நடந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியக் கொடியைஏற்றிவைத்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பல்வேறு பதக்கங்கள், விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்தபோது, வெள்ளத்தில் சிக்கிய உப்பள தொழிலாளர்களை மீட்ட காயல்பட்டினத்தை சேர்ந்தயாசர் அராபத், தண்ணீரில் நீந்தி சென்று, பால் பாக்கெட், ரொட்டி, மருந்துகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய திருநெல்வேலி தடிவீரன் கோயில்கீழத்தெருவை சேர்ந்த டேனியல் செல்வசிங், வெள்ளபாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட வைகுண்டம் வட்டாட்சியர் சு.சிவகுமார் ஆகியோருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தைமுதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் காசோலை, தங்க முலாம் பூசப்பட்ட பதக்கம், சான்றிதழும் வழங்கப்பட்டன.

சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து உண்மையானசெய்திகளை வெளியிட்ட கிருஷ்ணகிரியை சேர்ந்த முகமது ஜுபேருக்கு மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் பதக்கத்துடன், ரூ.25 ஆயிரத்துக்கான கேட்பு காசோலை, சான்றிதழ் வழங்கப்பட்டன.

வேளாண் துறை சார்பில், மாநில அளவில் திருத்திய நெல்சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து அதிகஉற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான ‘சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறன்’ விருது, சேலம்மாவட்டத்தை சேர்ந்த சி.பாலமுருகனுக்கு வழங்கப்பட்டது.

மதுரை, யா.கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்த உ.ஆயி அம்மாள் என்ற பூரணம், கொடிக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்காக, மகள் ஜனனிநினைவாக தனது 1.52 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். முதல்வரின் சிறப்பு விருதை, அவருக்கு வழங்கி, முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்.

கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்தியதில் சிறப்பாக பணியாற்றிய விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் கோ.சசாங்சாய், சென்னை மாவட்ட மத்திய நுண்ணறிவு பிரிவு துணை கண்காணிப்பாளர் ப.காசிவிஸ்வநாதன், ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் கா.மு.முனியசாமி, மதுரை மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளர் அ.பாண்டியன், ராணிப்பேட்டை மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் ஜெ.ரங்கநாதன் ஆகியோருக்கு காந்தியடிகள் காவல் பதக்கத்துடன், ரூ.40 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

சிறந்த காவல் நிலையத்துக்கான முதல்வர் விருதைபொருத்தவரை, முதல் பரிசு கோப்பையை மதுரைஎஸ்.எஸ்.காலனி காவல் நிலைய ஆய்வாளர் ப.பூமிநாதனிடமும், 2-ம் பரிசு கோப்பையை நாமக்கல் காவல்ஆய்வாளர் க.சங்கரபாண்டியனிடமும், 3-ம் பரிசு கோப்பையை பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் கே.வாசிவம் ஆகியோரிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE