திருவண்ணாமலை: ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதில் திமுக, காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள போட்டி, சென்னையில் நாளை (28-ம் தேதி) நடைபெறவுள்ள தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் எதிரொலிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டப்பேரவை தொகுதியை கடந்த 2006, 2011 மற்றும் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு திமுக ஒதுக்கியது. 3 தேர்தல்களிலும், காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் போட்டியிட்டார். 2006-ல் மட்டும் வெற்றி கண்டவர், அடுத்தடுத்த நடைபெற்ற 2 தேர்தல்களிலும் அதிமுகவிடம் தோல்வியை தழுவினார்.
இதேபோல், கலசப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதியை கடந்த 2006, 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியது. 2006-ல் பாமகவும், 2011 மற்றும் 2016-ல் காங்கிரசும் போட்டியிட்டது. மூன்று முறையும் அதிமுக வெற்றி பெற்றது. செய்யாறு மற்றும் கலசப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு தொடர்ந்து ஒதுக்குவதற்கு திமுகவில் அதிருப்தி கிளம்பியது.
இதன் எதிரொலியாக, 2016-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 2 தொகுதிகளையும் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு மீண்டும் ஒதுக்கக்கூடாது என திமுக தொண்டர்கள் போர்க்கொடி தூக்கினர். திமுக போட்டியிட வேண்டும் என மாவட்ட செயலாளரும் அமைச்சருமான எ.வ.வேலுவுக்கு அழுத்தம் கொடுத்தனர்.
» ஆளுநர் ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை: முப்படைகள், காவல் துறை அணிவகுப்பு
» ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து: அமைச்சர்கள், அதிமுக, பாஜக நிர்வாகிகள் பங்கேற்பு
இதனால், கட்சி தலைமையிடம் உள்ள தனது செல்வாக்கை பயன்படுத்தி 2 தொகுதிகளையும் எ.வ.வேலு கேட்டு பெற்றார். பின்னர் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 2 தொகுதிகளிலும் திமுக போட்டியிட்டு வெற்றி பெற்றது. கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு 2 தொகுதிகளை திமுக கைப்பற்றியதால், தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
டெபாசிட் இழந்த காங்கிரஸ்: இதேநிலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதியிலும் எதிரொலிக்கிறது. தொகுதி சீரமைப்புக்கு பிறகு நடைபெற்ற கடந்த 2009-ல் நடைபெற்ற தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிட்டது. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான எம்.கிருஷ்ணசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர், கூட்டணியில் மாற்றம் ஏற்பட்டதால், 2014-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிட்டு அதிமுகவிடம் தோல்வியை சந்தித்தது. இந்த தேர்தலில், திராவிட கட்சிகளால் தனித்துவிடப்பட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.கிருஷ்ணசாமியின் மகனான எம்.கே.விஷ்ணு பிரசாத், 27,717 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவியதுடன் டெபாசிட் தொகையையும் இழந்தார்.
இதையடுத்து, திமுக கூட்டணிக்கு மீண்டும் திரும்பிய காங்கிரஸ் கட்சிக்கு 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், ஆரணி தொகுதியை திமுக ஒதுக்கியது. காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிட்ட எம்.கே.விஷ்ணுபிரசாத் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் வெற்றியை ஒருமுறை கூட ருசித்து பார்க்காத திமுக தொண்டர்கள், வரக்கூடிய தேர்தலில் திமுக களம் இறங்க வேண்டும் என குரல் எழுப்பி வருகின்றனர்.
காங்கிரசுக்கு ஒதுக்காமல், 2021 சட்டப்பேரவை தேர்தலில் கலசப்பாக்கம், செய்யாறு சட்டப் பேரவை தொகுதியில் நேரடியாக திமுக போட்டியிட்டு வெற்றி பெற்றதுபோல், ஆரணி நாடாளுமன்ற தொகுதியிலும், வரக்கூடிய தேர்தலில் வெற்றி பெறுவோம் என முழக்கமிட்டு வருகின்றனர். இது தொடர்பான தங்களது விருப்பம் மற்றும் கருத்தை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தெரிவித்துள்ளனர். அவரும், தொண்டர்களின் உணர்வுகளை தலைமைக்கு கொண்டு சென்றுள்ளார் என கூறப்படுகிறது.
ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் திமுக மூத்த நிர்வாகிகள் கூறும்போது, “தொகுதி சீரமைப்புக்கு பிறகு ஆரணி நாடாளுமன்ற தொகுதி கடந்த 2009-ல் உருவானது. 2009, 2019-ல் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது. திமுக ஆதரவு அலையால் 2 முறையும் வெற்றி கண்டது.
2014-ல் திமுக போட்டியிட்டு, அதிமுகவிடம் தோல்வியை தழுவியது. தொகுதி சீரமைப்புக்கு முன்பு வந்தவாசி நாடாளுமன்ற தொகுதியாக இருந்தபோது 1967 மற்றும் 1971-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு ஜி.விஸ்வநாதன் வெற்றி பெற்றுள்ளார். 1962, 1980, 1984, 1989, 1991-ல் காங்கிரஸ், 1977-ல் அதிமுக, 1996-ல் தமிழ் மாநில காங்கிரஸ், 1998 மற்றும் 1999-ல் பாமக, 2004-ல் மதிமுக வெற்றி பெற்றுள்ளது.
2 முறை மட்டுமே திமுக வெற்றி... வந்தவாசி மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்றுள்ள 15 தேர்தல்களில் 2 முறை மட்டுமே வெற்றியை திமுக ருசித்துள்ளது. அரை நூற்றாண்டாக (53 ஆண்டுகளாக) திமுகவுக்கு வெற்றி கிட்டவில்லை என்பது வேதனையாக உள்ளது. எனவே, ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் வரக்கூடிய தேர்தலில் திமுக நேரடியாக களம் இறங்க வேண்டும், அரை நூற்றாண்டுக்கு பிறகு உதயசூரியன் உதிக்க வேண்டும். தொண்டர்களின் உணர்வுக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆரணி நாடாளுமன்ற தொகுதியை பெற்றுத் தருவதில் அமைச்சர் எ.வ.வேலுவும் உறுதுணையாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. சுழற்சி முறையில் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்தால் தேர்தல் களத்தில் திமுக தொண்டர்கள் சூறாவளியாக சுழன்று பணியாற்றி தலைவரின் பாதத்தில் வெற்றிக்கனியை சமர்ப்பிப்பார்கள்” என்றனர்.
காங்கிரஸ் தலைமை வலியுறுத்தும்... இது குறித்து காங்கிரஸ் தரப்பில் விசாரித்த போது, “ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் திமுக போட்டியிட, அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்து வருவது உண்மைதான். அதேநேரத்தில், ஆரணி தொகுதியில் காங்கிரஸ் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றியை பெற்றுள்ளது.
ஆரணி தொகுதியில் 2 முறையும், தொகுதி சீரமைப்புக்கு முன்பு வந்தவாசி தொகுதியில் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஆரணி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள எம்.கே.விஷ்ணு பிரசாத் மீண்டும் போட்டியிடுவதற்கான ‘வாய்ப்புகள்’ உள்ளன. டெல்லி தலைமையின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என்பதால், ஆரணி நாடாளுமன்ற தொகுதியை திமுக தலைமையிடம் கேட்டு பெறுவதில் தமிழக காங்கிரஸ் தலைமை கவனம் செலுத்தும்” என்றனர்.
ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதில் திமுக, காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. இரண்டு கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள போட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (28-ம் தேதி) நடைபெறஉள்ள தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் எதிரொலிக்கும். ஆரணி நாடாளு மன்ற தொகுதியை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தும் என அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், காங்கிரஸ் கோரிக்கையை பரிசீலனை செய்து முடிவு செய்யப்படும் என ஒற்றை வரியில் திமுக சார்பில் பங்கேற்கும் தலைவர்கள் பதிலளிக்கக் கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago