மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி சார்பில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு 4 பேர் கொண்ட குழு: கே.பாலகிருஷ்ணன்

By செய்திப்பிரிவு

சென்னை: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வீடு, வீடாகச் சென்று மத்திய பாஜக அரசின் நாசகர கொள்கைகளையும், இதற்கு துணைபோகும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்து எதிர்வரும் தேர்தலில் பாஜகவை படுதோல்வி அடையச் செய்வது என கட்சியின் மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது என்று அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் ஜன.24 அன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் என். பாண்டி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மத்திய பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 10 ஆண்டுகளாக வகுப்புவாதம் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலன் என்ற இரட்டை இலக்கோடு செயல்பட்டு வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவு வறுமை, வேலையின்மை, விலை உயர்வு கடுமையாக அதிகரித்துள்ளது. பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் அனைத்துக்கும் அநியாய ஜிஎஸ்டி வரி என ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது கொடூரமான தாக்குதலை மத்திய பாஜக அரசு நடத்தி வருகிறது.

பொதுத்துறை தாரை வார்ப்பு, கல்வி தனியார்மயம், மனுவாத கருத்தியல் பரப்பு, பாலினஅடிப்படையிலான அநீதிகள், தீண்டாமை உள்ளிட்ட சாதிய சமூகக் கொடுமைகள், சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல், பெண்கள் - குழந்தைகள் மீது பாலியல் வன்முறைகள் என தாக்குதல்கள் தொடர்கின்றன. மேலும் தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி உழைப்பாளி மக்கள் மீது அடுக்கடுக்கான தாக்குதலை தொடுத்து வருகிறது. மறுபுறம், பெரு முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சலுகைகளை வாரி, வாரி வழங்கி வருவதுடன் இந்திய தேசத்தின் வளத்தை கொள்ளையடிக்க வழி வகுத்து தருகிறது.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்று கூறி இந்திய அரசமைப்பு சட்டத்தின் விழுமியங்களை காலில் போட்டு மிதித்து பாசிச சர்வாதிகார அடிப்படையில் ஆட்சி நடத்தி வருகிறது. ஜனநாயக உரிமைகள், மாநில உரிமைகள், கூட்டாட்சி தத்துவம், மனித நேயம், மதச்சர்பின்மை, சமூக நீதி, நாடாளுமன்ற ஜனநாயகம் ஆகிய அனைத்தையும் கபளீகரம் செய்து மதவெறியை தூண்டிவிட்டு மக்களை கூறுபோட்டு வருகிறது. பாஜகவின் ஆட்சியதிகாரத்தை பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார அமைப்புகள் காஷ்மீர், மணிப்பூர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு படுகொலைகளை அரங்கேற்றி நாட்டையே ரணகளமாக மாற்றி வருகின்றன.

தமிழகத்தில் இந்தி திணிப்பு, நீட் தேர்வுக்கு விலக்களிக்க மறுப்பு, தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடர் வெள்ள சேதத்துக்கு உரிய நிவாரண நிதி கொடுக்க மறுத்து வருவது, மாநிலத்துக்கான நிதி பங்கீட்டை மறுப்பது, ஆளுநரை பயன்படுத்தி போட்டி அரசாங்கத்தை உருவாக்குவது உள்ளிட்ட வஞ்சக அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறது. இதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் துணை போகின்றன.

கடந்த 10 ஆண்டுகளாக தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள், குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் சொல்லொணா துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். இப்படிப்பட்ட மோசமான மத்திய பாஜக அரசை ஆட்சியிலிருந்து விரட்டி, இந்திய தேசத்தை காப்பது என்ற உன்னதமான குறிக்கோளோடு நாடு முழுவதும் மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கி செயல்படுகின்றனர். இக்கூட்டணி நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணிகள் வீடு, வீடாக சென்று மத்திய பாஜக அரசின் நாசகர கொள்கைகளையும், இதற்கு துணைபோகும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்து எதிர்வரும் தேர்தலில் பாஜகவை படுதோல்வி அடையச் செய்வது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்குழு: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக தொகுதி பங்கீட்டுக்குழுவுடன் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத் (குழு தலைவர்), பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் என். குணசேகரன், க. கனகராஜ் ஆகியோர் செயல்படுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது, என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்