அதிமுக தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: மக்களவைத் தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. தேர்தலுக்காக பல்வேறு பணி குழுக்களையும் அமைத்து வருகின்றன. அதிமுகவில் தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, தேர்தல் பிரச்சாரம், விளம்பரம் ஆகிய 4 பிரிவுகளில் தேர்தல் பணி குழுக்களை அமைத்து கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், சி.பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், செம்மலை, பா.வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்களிடம் மின்னஞ்சல் மூலம் கருத்துகளை பெறுவது, ஒவ்வொரு துறையிலும் செயல்படும் சங்கங்கள், தொழில்துறை சார்ந்தவர்களைச் சந்தித்து கருத்து கேட்பது என முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தின் முடிவில் ஜெயக்குமார் கூறியதாவது:

அதிமுக தேர்தல் அறிக்கையானது மாநிலங்களின் உரிமையை பேணிக் காக்கும் விதமாகவும், மக்களின் நலன் சார்ந்த தேர்தல் அறிக்கையாகவும் இருக்கும். மொத்தத்தில் மக்களவை தேர்தலில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஹீரோவாக இருக்கும்.

தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணையலாம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பனும் இல்லை. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மோசடி தேர்தல் அறிக்கையை தயார் செய்து மக்களை நம்ப வைத்ததுபோல இந்தமுறை தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. தினகரன் ஒரு தனிமரம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE