நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை: கட்சி தொடங்க ஆயத்தம்?

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர இருக்கிறார் என கூறப்படும் சூழலில், அவரது மக்கள் இயக்கத்தினர் தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, அண்மையில் பெருமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதற்கிடையே அவ்வப்போது கட்சிக்கான அணிகளும் அமைக்கப்பட்டு, தொடர்ச்சியாக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், நேற்று பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்களுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டார். வழக்கமாக கட்சி தொடங்கலாமா? மக்களிடையே நமது செல்வாக்கு எவ்வாறு உள்ளது? என்பது தொடர்பாக நிர்வாகிகளிடம் விஜய் கருத்துகளைக் கேட்டறிவார். ஆனால் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கட்சியைத் தொடங்க வேண்டும் என உறுதியான முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, களப்பணிகளை தீவிரப்படுத்த வேண்டும், பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய அறிவுறுத்தல்கள் விஜய் தரப்பில் வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது.

குறிப்பாக தேர்தல், கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்க விஜய்க்கு அதிகாரம் அளிப்பது உள்ளிட்டவற்றுக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர். அதேநேரம், கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனை குறித்து ரகசியம் காக்க வேண்டும் என கண்டிப்பான அறிவுறுத்தல்களும் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்தல், அதற்கான தலைவராக விஜய்-ஐ பொறுப்பேற்கச் செய்தல் போன்ற பல்வேறு முடிவுகளும் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் மகிழ்ச்சியடைந்த நிர்வாகிகள், பணிகளைத் தீவிரப்படுத்துவோம் என உறுதியளித்துச் சென்றதாக மக்கள் இயக்க வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

கூட்டத்தில், விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.அனந்து கலந்து கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE